முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கடந்த 2012- ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 103 பாடல்கள் எழுதியவர் என்ற பெருமை இவரையேச் சாரும். மேலும், ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமார் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்