திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது.
அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டு இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலகமே அதிர்ந்து போனது.
கைதான மூன்று பேரில் முதலாமவர் பெயர் கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த இவருக்கு 39 வயதாகிறது. இரண்டாவது நபர் ராஜேந்திரன், இவர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் சசிகுமார், உச்சிபுளி அருகே உள்ள நாதாச்சி என்கிற பகுதியில் வசிக்கும் கார் டிரைவர்.
சசிகுமார் ஓட்டி வந்த டிராவல்ஸ் காரில் வந்த ராஜேந்திரன், கிருஷ்ண குமார் ஆகியோர் போலீ சாரால் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது என்கிற தகவலை அறிந்த லோக்கல் பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்சிபுளி காவல் நிலையத்தை நோக்கி ஓடினார்கள். அங்கி ருந்த காவலர்கள் ராமநாத புரம் எஸ்.பி. அலுவலகத்தில் மூவரையும் தங்க வைத் திருப்பதாக பதில் கூறினார் கள். எஸ்.பி. அலுவலகத் திற்குச் சென்று கேட்டபோது, அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் க்யூ பிரிவு அலுவலகத்தில் வைத்திருப்பதாக கூறினார்கள். எங்கும் இந்த மூவரையும் காணாததால் பரபரப்பு கூடிக் கொண்டிருந்தது.
22-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் தலைவர் அலுவலகத்திலிருந்து ஒரு செய்தியை கசியவிட்டார்கள்.
“”கைது செய்யப்பட்ட மூவர் சென்ற காரில் ஒரு பெரிய பார்சல் இருந்தது. அந்த பார்சலில் 300 கிராம் சயனைட் என்கிற உயிர்க்கொல்லி விஷம் இருந்தது. அது தவிர 75 கண்ணாடி குப்பிகளில் அந்த உயிர்க்கொல்லி மருந்து அடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடிய சாட்டிலைட் தொலைபேசிகள், மற்றும் சாதாரண செல்போன்கள் இருந்தன. ஆயிரக்கணக்கில் இந்திய, இலங்கை ரூபாய்களை வைத்திருந்தார்கள்.
அதைப்பற்றி நாங்கள் விசாரித்தபோது… கிருஷ்ணகுமார், “நான் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் உதவியாளராக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு முதல் பணியாற்றினேன். நான்தான் அவரது டிரைவர். 2000-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த நான் அடிக்கடி இலங்கைக்கு சென்று வருவேன். கடைசியாக இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது திருச்சிக்கு வந்த நான், அகதி என பதிவு செய்யாமல் திருச்சி கே.கே.நகரில் தங்கியிருந்தேன். என்னை இலங்கைக்கு கள்ளத்தோணியில் கொண்டு சென்று விடுவதாக கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபடும் ராஜேந்திரன் சொன்னார். அதனால்தான் நான் வந்தேன்.
இப்பொழுது இலங்கையில் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னை எனது நண்பர்கள் அழைத்தார்கள். அதற்காக நான் செல்ல முயற்சித்தேன். போகும் வழியில் இலங்கை கடற்படையிடம் சிக்கிக்கொண்டால் உயிர் துறப்பதற்காக நான் சயனைடு விஷத்தை வைத்தி ருந்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்’ என போலீஸ் கசியவிட்ட இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
புலிகள் இயக்கம் மறுபடியும் உருவாகிறதா? யார் இந்த கிருஷ்ணகுமார்? என டெல்லியிலிருந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், சென்னையிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளும் ராமநாத புரத்தை நோக்கி ஓடினார்கள்.
“”உனக்கு பிரபாகரனைத் தெரியுமா? அவர் இப்போது எங்கே இருக்காருன்னு சொல்லு. மறுபடியும் புலிகள் இயக்கம் உருவாகிறதா?” என ஏகப்பட்ட கேள்விகளை கிருஷ்ணகுமாரிடம் கேட்டார்கள். அனைத்திற்கும் மவுனத்தையே பதிலாகத் தந்த கிருஷ்ணகுமாரின் பாஸ்போர்ட்டை ஆராய்ந்த போது, வெளிநாடு சென்றுவந்தது தெரியவர… “அந்த நாட்டில் யாரைப் பார்க்கப் போனே?’ என கேட்டதற்கும் கிருஷ்ணகுமாரிடம் பதிலில்லை. இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தை பற்றிக் கேட்டபோது, தாரை தாரையாக கண்ணீர் மட்டும் வந்தது எனச் சொல்லும் போலீசார், கிருஷ்ணகுமாரின் செல்போன் தொடர்புகள் மூலம் அவரது நண்பர் ஒருவரை தேடிவருகிறார்கள்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ண குமாரை திருச்சியில் அவர் தங்கியிருந்த நண்பர் வீட்டிற்கு கூட்டிச் சென்று சோதனையிட்டு சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.
இதுபற்றி ராமநாத புரம் எஸ்.பி.மயில் வாகனனிடம், “”சயனைடு குப்பி களுடன் கிருஷ்ணகுமார் என்கிற இலங்கை நபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையைச் சேர்ந்த வர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்கிறீர்கள். அதை ஏன் ஒரு அறிக்கை யாக தரவில்லை. கிருஷ்ணகுமாரின் போட்டோ வையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிடும் போலீசார் அவர் வைத்திருந்ததாக சொல்லப்படும் சயனைடு குப்பிகள் படத்தை ஏன் வெளியிட வில்லை?” எனக் கேட்டோம்.
“”இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது” என்று முடித்துக்கொண்டார்.
“”தமிழகத்திற்கு ராகுல்காந்தி வருகையை யொட்டி தமிழக போலீசார் மிகவும் எச்ச ரிக்கையுடன் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. வேண்டுமென்றே பீதியைக் கிளப்புகிறார்களோ என போலீசார் இந்த கைது விஷயத்தில் காட்டும் மௌனம் உணர்த்துகிறது” என்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருநாவுக்கரசு.
பிரபாகரன் இன்னமும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்.