பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது.
ஜாவெண்டம் விமான நிலையத்தில், இரு தற்கொலைப்படை தாரிகளுடன் வந்த மூன்றாவது நபர் இவர் எனக் கருதப்பட்டது.
தற்போது மேலும் நீண்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கும் பெல்ஜியம் காவல்துறை அந்த நபரைக் கண்டுபிடிக்க உதவும்படி கோரியுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இது பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மேலும் நால்வர் பலியாகியுள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.