பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக முதல் முறையாக கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மேக்ரான் முதல் வெளிநாட்டு பயணமாக ஜேர்மனிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
தற்போது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு பயணமாக உள்ளார்.
மாலி நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் பிரான்ஸ் ராணுவ வீரர்களை சந்திப்பதற்காக இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்பயணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பிரான்ஸ் பத்திரிகையாளர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் தகவல் அனுப்பி அவர்களை மட்டும் ஜனாதிபதியுடன் மாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு செய்திகளை சேகரிக்க அனுமதி அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முதல் 20 இடங்களில் உள்ள முக்கிய பத்திரிகைகளுக்கு எவ்வித அழைப்பும் செல்லவில்லை என்பது பத்திரிகைகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக மாறியுள்ளது.
‘பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் இதுபோன்ற ஒரு செயலில் ஈடுப்படவில்லை.
இம்மானுவேல் மேக்ரானுக்கு ஆதரவான பத்திரிகைகளை மட்டும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்வது பத்திரிகை தர்மத்தை சீர்குலைக்கும் செயல்’ என முன்னணி பத்திரிகைகள் குற்றம் சாட்டியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கு முதல் முறையாக பத்திரிகை துறை கண்டனங்கள் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.