பிரிட்டனின் அழுத்தம் இலங்கைக்கு அவசியம்! ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கும் கூட்டமைப்பு கடும் அதிருப்தி

286
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக, பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் கருத்து உள்ளூர் உணர்வுகளைச் சமாளிப்பதற்கான கருத்து என சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதிகாரிகள், இலங்கை அரசின் தெளிவான முடிவு அடுத்த சில தினங்களில் வெளிவரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:​-

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் இருந்தனர். அன்று காலை இரா.சம்பந்தன் எடின்பேர்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அத்துடன், சுமந்திரன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர்களுடன் இணைந்து, லண்டனிலுள்ள உள்ள வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் இலங்கைக்கான பிரிவு அதிகாரிகளைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பி.பி.சி. செவ்வியில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று தெரிவித்த கருத்து தொடர்பாக, பிரிட்டன் அதிகாரிகளிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஜெனிவாத்
தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதற்கு பிரிட்டன் அதிகாரிகள், உள்நாட்டு உணர்வுகளைச் சமாளிப்பதற்காக ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்கலாம் என்று வாதிட்டதுடன், இது கொள்கை மாற்றமாக தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டனர். எனினும், அடுத்த சில நாட்களில் இது தெளிவாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைனின் இலங்கைக்கான பயணத்தையே அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் பின்னர், சம்பந்தனுடன் இணைந்து கொள்வதற்காக சுமந்திரன் எடின்பேர்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர்கள், ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு முறை குறித்து எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை, ஜெனிவா பிரேணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பிரிட்டன் தெளிவாக இருப்பதாக, அதன் இலங்கைக்கான தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் கடந்த தினங்களில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து கருத்துக்களை தெரிவிப்பதைவிட, ஜெனிவா பிரேரணையின் நடைமுறையில் அவதானம் செலுத்துவது சிறந்தது.

இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசு பயணிக்க வேண்டிய பாதை தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்த அரசு எவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளது என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்னதாக குறித்த தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்த முதற்கட்ட அறிக்கை, மனித உரிமைகைள் சபையில் முன்வைக்கப்படும்”- என்று அவர் கூறியுள்ளார்.

 

SHARE