பிரித்தானியாவிலுள்ள இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரி்யவருகிறது.
குறித்த நபர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நீதிமன்ற பதிவாளருக்கு இந்த பணிப்புரையை விடுத்தார்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து மேல் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அவர்களை பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்றம் கோரியுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி, நீதி அமைச்சு , அமைச்சின் செயலாளர் , வெளிவிவகார அமைச்சு , அமைச்சின் செயலளர் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் மன்றுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் பதுங்கியுள்ளவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தால் அவர்கள் எந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பன தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்த முடியும் என குடிவரவு , குடியகழ்வு திணைக்களம் தெரியப்படுத்தி இருந்தது.
அதனால் அது தொடர்பான விபரங்களை நீதிமன்ற பதிவாளர், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிபதி பணித்தார்.
அத்துடன் குறித்த இரு குற்றவாளிகளையும் நாடு கடத்துவது தொடர்பாக முன்னேடுக்கபப்டும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் ஆகியோருக்கும் பிரித்தானிய உள்விவகார அமைசுக்கும் தெரியப்படுத்த தகவல்களை அனுப்பி வைக்குமாறும் நீதிபதி பணித்தார்.
இவற்றின் மூலம் பிரித்தானியாவிலுள்ள தலைமறைவாக உள்ள இரு குற்றவாளிகளும் தம்மை நாடு கடத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளட்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும், இரும்பு கம்பிகள், பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.