பிரித்தானியாவில் குடும்ப விசா விண்ணப்பம் செய்பவர்களுக்குரிய முக்கிய சட்டமாற்றம்

204

அண்மையில் இடம்பெற்ற MM (Lebanon) & Others எனும் வழக்கினைத் தொடர்ந்து, குடும்ப விசாக்கள் தொடர்பான குடிவரவு சட்டம் அதற்கான வருமானம் (£18,600) மற்றும் Article 8 சம்பந்தமாக UK உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சத்தை லங்காசிறி வாசகர்கள் அறிந்து இருப்பார்கள்.

அந்த வழக்கில், ஸ்பொன்சர் செய்பவர்கள் குறைந்தளவு வருமானமாக £18,600 பவுண்களை பெற்றிருக்க வேண்டும் எனும் விதிமுறை சட்டபூர்வமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், உச்சநீதிமன்றம் பலகரிசனைகளை முன்வைத்திருந்தது.

இந்த வழக்கைத் தொடர்ந்து உள்துறை அமைச்சு, பிரித்தானியாவில் குடியுரிமை, நிரந்தர மற்றும் அகதிவதிவுரிமை பெற்றவர்களின் கணவன், மனைவி அல்லது குழந்தைகளை பிரித்தானியாவுக்கு ஸ்பொன்சர் செய்வதற்கான சட்டவிதிகளில் 2017 ஆகஸ்ட் மாதம் 10இல் இருந்து சில மாற்றங்களை முன்வைக்கின்றது.

பெரும்பான்மையான சட்டம் இப்பொழுது நடைமுறையில் இருப்பது போலவே இருக்கும். குறிப்பாக, வருமானம் வருடத்திற்கு 18,600 பவுண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கும் என்பதில் மாற்றம் கிடையாது.

இருப்பினும், இந்த வருமானத்தை காண்பிப்பதற்கான வழிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.

மூன்றாந்தரப்பு பண உதவிபெறுதல்

தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் கீழ் மூன்றாம் தரப்பு பணஉதவிபெற்று ஸ்பொன்சர் செய்வதக்கு இடமில்லை. ஆனால், இப்பொழுது வருகின்ற சட்டமாற்றத்தின் படி இது தொடர்பாக பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதாவது, விதிவிலக்கான சூழல்களில் (Exceptional Circumstances) மனுதாரர் மூன்றாம் நபரின் பண உதவியை நாடலாம். இது நம்பகமான உறுதி செய்யப்பட்ட தரப்பில் இருந்து வரவேண்டும். இது எதிர்காலத்தில் மனுதாரர் அல்லது ஸ்பொன்சர் செய்பவருடைய ஊதியம் அல்லது சொந்த தொழிலில் இருந்து வந்த வருமானமாக இருக்கலாம், வேறு ஏதாவது நம்பத்தகுந்த முறையில் வந்த வருமானமாகவும் இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட சட்டமாற்ற நிபந்தனைகளை பார்க்கும் பொழுது, மனுதாரர் தமது பெற்றோர் போன்றவர்களுடைய பணஉதவியை நாடக்கூடியதாக இருக்கும். அத்துடன், மனுதாரர் பிரித்தானியாவுக்குள் வந்தவுடன் உறுதி செய்யப்படட வருமானம் ஒன்றை பெறக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுது, அந்த விடயத்தையும் கருத்திற் கொள்ளலாம். இந்த வருமானம் ஒருநிலையானது என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டவைகள் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலதிகமாக ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பில் பக்கம் 11ஐ பார்க்கவும்.

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/630926/60429

தற்பொழுது உள்ள குடும்ப குடிவரவு சட்டத்தின் கீழ் ஒருவர் அரசாங்கத்திடம் பண உதவிகள் (Benefits) பெறமுடியாது. ஆயினும் புதிய சட்டமாற்றத்தின் கீழ், ஒருவர் ஆதரவற்ற நிலைக்கு (Destitute) தள்ளப்பட்டால், மற்றும் குழந்தையின் நலம் சார்ந்த விடயமாக இருந்தால் அவர்கள் அரச உதவிகள் பெறுவதற்குரிய வழிவகைகள் உள்ளன.

மனுதாரர் குடும்ப விசாவுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வருமான சட்ட விதிமுறைகளை நிவர்த்தி செய்ய தவறும் பட்சத்தில் Article 8 கீழ் விசாவை வழங்குவதற்கும் Entry Clearance

அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் மனுதாரர் பல நிபந்தனைகளை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு விசா வழங்கப்படும் பொழுது ஒருவர் நிரந்தர வதிவுரிமைக்காக 10 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ வேண்டும்.

அதேவேளை மனுதாரர் 5 வருட விசாப் பிரிவின் கீழ் தனது விசாவை மாற்றிக் கொள்ளவும் இடமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டமாற்றமானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதிபலிக்கின்றதா? என்பது ஒருகேள்விக்குறியாகும். ஏனெனில் ஒருவர் 18600 புவுண்டுகள் என்ற வருமானத்தை காட்ட முடியவில்லை என்றால் உச்சநீதிமன்றம் 10 வருடத்துக்கு பின்னர் நிரந்திர வதிவுரிமை கொடுக்கப்படலாம் என்று கருத்துப்பட தீர்ப்பைக் கூறவில்லை.

ஒரு முறை விண்ணப்பம் மேற்கொள்ளும் பொழுது, விண்ணப்பத்துக்கும் Immigration Health Surcharge (IHS) இங்கும் செலுத்த வேண்டிய கட்டணமே ஏறத்தாழ 1500 பவுண்டுகள் செலவாகின்றது.

அவ்வாறாயின் 10 வருடத்துக்கு ஒருவருக்கு மாத்திரமே நிரந்தர வதிவுரிமை பெறுவதற்கு முன்னர் பெரும் தொகை பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பல குடும்பங்களால் இந்தப் பணத்தை செலவு செய்வதற்கு மிகவும் கஸ்டங்கள் ஏற்படலாம். இதனைவிட, பல மேலதிக நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன.

குறிப்பாக, நிரந்தர வதிவுரிமை இல்லாமல் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் பொழுது பல்கலைக்கழக மானியங்கள் கடன்கள் பெற்றுக்கொள்ளுவதற்கு சிக்கல்கள் ஏற்படும். வீடு வாங்குதல், Mortgage பெற்றுக் கொள்வது போன்ற விடயங்களிலும் கஸ்டமாக இருக்கும்.

2017 ஜூலை 30ஆம் திகதி வரைக்கும், MM (Lebanon) & Others இன் தீர்ப்புக்கு பின்னர் 5000 வரையான மனுக்கள் உள்துறை அமைச்சிடம் நிலுவையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான விண்ணப்பங்களையும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விண்ணப்பங்களையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு உள்விவகார அமைச்சு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் மறுக்கப்படும் பட்சத்தில் வழமை போன்று மேல்முறையீட்டு அனுமதியும் வழங்கப்படும் என்றும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விதிமுறை மாற்றங்கள் தொடர்பாக, தெளிவான ஒரு வழிகாட்டல் (Guidelines) இல்லாததாலும், தெளிவற்ற தன்மை நிலவுவதாலும், பலவிண்ணப்பங்கள் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

தகவல் Jay Visva Solicitors.

மேலதிக தொடர்பு எண் (0044) 020 8573 6673

SHARE