பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் 

184

பிரித்தானியாவில் இன்று திடீரென முன்னணி மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால் மருத்துவமனை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே வேளையில், சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடங்குவதும் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மின்னணு சாதனங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்களை பொருத்தி வருகின்றனர். எனினும், சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் இன்று முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கான பல்வேறு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, தேசிய சுகாதார சேவைகள் (National Health Service) கடுமையாக பாதிக்கப்பட்டன. லண்டன், பிளாக்பர்ன், நாட்டிங்காம், கம்பிரியா மற்றும் ஹெர்ட்போட்ஷைர் ஆகிய பகுதிகளில் மருத்துவ அறக்கட்டளைகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிப்புக்கு உள்ளாகின.

மருத்துவ சேவை இணையதளங்கள் முடங்கியதால், ஆம்புலன்ஸ்களை குறித்த பகுதிகளுக்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்களை மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விட்டன.

இதனிடையே குறித்த மருத்துவமனை தகவல்களை பெற பிணைத் தொகையாக 230 பவுண்டு Bitcoin தொகை கொடுத்தால்தான் மட்டுமே அனுமதிக்கப்படும், இல்லையேல் தகவல்கள் முற்றாக அழிக்கப்படும் என திரையில் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தாக்குதலானது பிரித்தானியா மட்டுமின்றி ஸ்பெயின், ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 74 நாடுகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விளக்கமளித்த வல்லுநர்கள், தற்போதைய சூழலில் நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை எனவும், தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE