பிரேசில் நாட்டின் பாராளுமன்றத்தில் அதிபர் தில்மா ரூசெப்பின் பாராளுமன்ற நடவடிக்கைக்கு 6 மாத காலம் இடைக்கால தடை விதிக்க அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68) என்ற பெண் அதிபராக உள்ளார். அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிற நிலையில், 2014-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்காக நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் வருமானத்தை உயர்த்தி காட்டி நிதி விதிமுறைகளை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அவர் மறுத்துள்ளார்.
அவரது பதவியை பறிப்பதற்காக குற்ற விசாரணை நடத்துவதற்கு பிரேசில் பாராளுமன்றத்தின் சிறப்பு குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான ஓட்டெடுப்பில், தில்மா ரூசெப்புக்கு எதிராக 38 பேர் ஓட்டு போட்டனர். ஆதரவாக 27 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இதனால் அவரது பதவியை பறிக்கிற வகையில் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேறி விட்டதால், அது மேல்-சபையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கும் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் தீர்மானம் நிறைவேறிவிட்டதால் தில்மா ரூசெப்புக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற செனட் சபை வாக்கெடுப்பில் அதிபர் தில்மா ரூசெப் மீது குற்றவிசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அவர் 6 மாத காலத்துக்கு அதிபர் பதவியில் இருந்து விலகி இருந்து, விசாரணையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இரவு முழுவதும் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாக இந்த வாக்கெடுப்பு நடந்தது.
அதிபரை பதவி நீக்குவதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று 55 செனட் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர் மீது விசாரணை நடத்தப்படக்கூடாது என்று 22 பேர் வாக்களித்தனர்.
இதனிடையே அதிபர் டில்மா ரூசெப் மீதான பதவி நீக்க விசாரணையை கண்டித்து பிரேசிலில் பல்வேறு போராட்டங்கள் தொடங்கியுள்ளது.