ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி விலகியுள்ளது.
ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரியோ ஒலிம்பிக்கிலிருந்து பலர் விலகியுள்ள நிலையில், பிரையன் சகோதரர்களோ, ஸிகா வைரûஸ நேரடியாக காரணம் காட்டாமல், சுகாதாரப் பிரச்னை காரணமாக விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். கணவர், தந்தை என்ற பொறுப்புகள் தங்களுக்கு இருப்பதால் சுகாதாரப் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் கலக்கி வரும் பிரையன் சகோதரர்கள், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கமும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். பிரையன் சகோதரர்களுக்குப் பதிலாக வேறு யாரை களமிறக்கலாம் என ஆராய்ந்து வருவதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களான ஜான் இஸ்னர், சாம் கியூரி ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் காட்டி ஏற்கெனவே ஒலிம்பிக்கில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. கனடா டென்னிஸ் வீரர் மிலோஸ் ரயோனிச், ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சைமோனா ஹேலப், செக்.குடியரசைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் தாமஸ் பெர்டிச் ஆகியோர் ஸிகா வைரûஸ காரணம் காட்டி ஒலிம்பிக்கிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.