பிலக்குடியிருப்பு மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து மாணவர்கள், கல்விச் சமுகத்தினர் ஆதரவு வழங்க வேண்டும். – சிவசக்தி ஆனந்தன் எம்.பி வேண்டுகோள்.
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்கள், விமானப்படையினர் சுவீகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 15 நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக கடும் வெயிலிலும் பனியிலும் வீதியோரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுக்கு காணியும் கல்வியும் அடிப்படை மனிதஉரிமை ஆகும். மறுக்கப்பட்டுள்ள இந்த உரிமைகளுக்காக போராடும் அந்த மாணவர்களுக்கு உறுதுணையாக அனைத்து மாணவர்களும், கல்வி சமுகத்தினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (13.02.2017) நடைபெற்ற வ கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த விளையாட்டுப்போட்டி அதிபர் திரு.இ.தேவராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் வவுனியா வடக்கு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் – நிர்வாகம் திருமதி மாலதி முகுந்தன், வவுனியா வடக்கு கல்வி வலயம் உதவிக்கல்வி பணிப்பாளர் – உடற்கல்வி திரு.மங்களகுமார், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரவிச்சந்திரன், மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கிராம பொது அமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



