பிள்ளைகளின் நல்ல நண்பர்கள் பெற்றோர்களாகவே இருக்க முடியும்

253

யாழ்.குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெறும் சம்பவங்கள்  வேதனையளிப்பதாக உள்ளன. வீடுடைத்துக் களவு, வீதியில் வைத்து வாள் வெட்டு, மாணவர்கள் சிலர் அட்டகாசம் என்ற செய்திகள். ஏன்? இப்படி என்ற கேள்வியை ஏற்படுத்தி விடுகின்றது.

இத்தகையதோர் நிலையில் எங்கள் இனம் சமூகத்தின் எதிர்காலம் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதிலும் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் விசேட செயற்திட்டங்களை அமுல்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது.

எங்கள் பிள்ளைகள் விடுகின்ற தவறுகளுக்காக அவர்கள் தண்டனை பெறுகின்ற போது அவற்றுக்குப் பழகிக் கொள்கின்ற ஒரு சூழ்நிலையும் தோற்றம் பெறும் என்பதால், சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் நடத்தைக் கோலங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும்.

இதில் பெற்றோர்களின் வகிபங்கு என்பது மிகவும் முக்கியமானது. பெற்றோரின் கட்டுப்பாட்டில், அவர்களின் அரவணைப்பில் இருக்கக் கூடிய பிள்ளைகள் நிச்சயம் புறச்சூழலில் நடக்கக்கூடிய சம்பவங்களை தமது பெற்றோரிடம் எடுத்துக் கூறுவர்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக மகனுக்கு பதினாறு வயது கடந்து விட்டால் அந்த மகனுடன் கதைப்பது, அன்பு பாராட்டுவது என்பவற்றில் இருந்து தந்தை விலக்குப் பெற்றுக் கொள்கிறார்.

இதனால் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அநேகமாக இடங்களில் மகன் தனது தேவைகளை தாயினூடாகவே தந்தைக்குச் சொல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலைமைகளே பெற்றோரிடமிருந்து ஆண் பிள்ளைகளை விலத்திக் கொள்கிறது. அத்தகையதோர் சூழ்நிலையில் வெளியக நட்பு ஏற்பட்டுவிட அதன்வழி தான் நினைத்த பாட்டில் நடப்பதற்கு அந்த இளைஞன் தயாராகின்றான்.

இது ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் தன் பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்ற துன்பம் பெற்றவர்களை தாக்குகிறது.

ஆக, பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தந்தை தன் பிள்ளைகளின் உன்னதமான நண்பனாக இருக்க வேண்டும். ஒரு பிள்ளை தான் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தன் தந்தையிடம், தாயிடம் தயக்கமின்றி எடுத்துக் கூறக்கூடியதான ஒரு சூழமைவை ஏற்படுத்தி விட்டால் அந்தப் பிள்ளை நிச்சயம் பெற்றோரின் சொற்படியே நடந்து கொள்ளும்.

அதேநேரம் பிள்ளை எதிர்கொள்கின்ற பிரச்சினையிலிருந்து சுமுகமாக விடுபடக்கூடிய ஆலோசனைகளை வழங்குகின்ற திறன்களையும் பெற்றோர்கள் கொண்டிருப்பது கட்டாயமானதாகும்.

வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு கூக்குரல் போடுகின்ற பெற்றோர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்வர் என்பதால் பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கேற்றால் போல் அவர்களின் பாதையில் சென்று அவர்களை வழிப்படுத்தும்நுட்பத்தையும் பெற்றோர்கள் பெற்றிருப்பது கட்டாயம்.

எனவே, பெற்றோர்கள் எப்பொழுதும் தமது பிள்ளைகளின் முதலாவது நண்பர்களாக இருப்பது பிள்ளைகளின் நேரிய வழிப்பாதைக்கு அவசியமாகும் என்பதால் தோளுக்கு மூத்தால் தோழன் என்பதை மறந்து தோளுக்கு மூத்த தன் மகன் தனக்குத் தோழன் என்பதாக மாற்றிக் கொள்வது ஒவ்வொரு தந்தையர்களினதும் தலையாய கடமையாகும்.

SHARE