எதிர்கால சிற்பிகளாகிய எமது பிள்ளைகளை சமூகத்தில் நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் மிக்க பிரஜைகளாக்குவதற்கு ஒவ்வொரு பெற்றோர்களினது கவனமும் தங்களது பிள்ளைகளின் மீது இருத்தல் மிகமிக அவசியம் என டாக்கடர் என்.ரமேஸ் தெரிவித்தார்.
கல்முனை குழந்தை யேசு பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு இருதயநாதர் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி தர்சினி தலைமையில் நேற்று(22) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் மிகவும் சிறப்பானதாகவும், திறமையானதாகவும் காணப்பட்டது. அந்தவகையில் இந்த மண்டபத்தில் கூடியிருக்கும் அனைத்து பெற்றோர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.
தங்களது பிள்ளைகளிடம் இதுவரை வெளிப்படையாக தெரியாமல் இருந்த எத்தனையோ திறமைகளை இந்த மேடையில் வெளிப்படுத்தியிருப்பதனையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது சிறுவர்களிடையே ஞாபக சக்தி குறைவாக இருந்ததனை பார்க்க முடிந்தது. அதாவது தாங்கள் சிலநேரம் நிகழ்ச்சிகளின்போது பிழையாக செயற்பட்டாலும் அதனை அருகில் பார்த்து சரியாக செய்யவேண்டும் என்று நினைத்து அதனை சரியாகச் செய்ததையும் அவதானிக்க முடிந்தது.
பெற்றோர்களாகிய நீங்கள் முன்னைய பிள்ளைகள் போன்று தற்போதைய பிள்ளைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க முடியாது.
ஏனெனில் உங்களது பிள்ளைகள் உங்களிடம் பல கேள்விகளை கேட்பார்கள். அந்த அளவிற்கு தற்போதைய பிள்ளைகள் திறமைசாலிகளாக காணப்படுகின்றார்கள்.
அவ்வாறான பிள்ளைகளை நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்க்கவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், இந்நிகழ்விற்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் என்.ரமேஸ் பிரதம அதிதியாகவும் மற்றும் அருட்சகோதரி தயாளினி, விசேட அதிதிகளாக வைத்தியர் திருமதி புஸ்பலதா லோகநாதன், மாவட்ட சம்பத் வங்கி முகாமையாளர் ஏ.டேவிட் நிதர்சன், மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் எஸ்.கணேஸ் மற்றும் பெற்றோர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.