முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றபோது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணியினால் இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பின் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்திரகாந்தன் கடந்த பத்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல் நீதிமன்றில் பிணை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக உச்ச நீதிமன்றில் பிணை தாக்கல் செய்யப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.