புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ஆவது சந்தேக நபரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்ததாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்து உள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் பதினோராவதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தாயாரால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதில் தனது மகனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும், மகனை கைது செய்து அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தி வருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டார்.
முறைப்பாட்டின் பிரகாரம் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு துன்புறுத்தியோ சித்திரவதை படுத்தியோ இருக்கின்றர்களா என்பது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டோம். அதில் அவ்வாறு சந்தேக நபர் எவ்விதமான துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகவில்லை எனது தெரிய வந்துள்ளது.
தற்போது முறைப்பாட்டாளரான தாயாரிடம் அது பற்றி தெரிவித்து உள்ளோம். அத்துடன் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நாம் தலையிட முடியாது. அது தொடர்பில் ஏதேனும் தெரிவிக்க வேண்டும் எனில் சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளாதாகவும் தெரிவித்தார்.