புதிய அரசாங்கம் இதுவரையில் மக்களுக்கு என்ன செய்தது? யார் ஆளும் கட்சி? யார் எதிர்க்கட்சி?

270

 

 எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மாற்றம் என்ற ஒன்றை பிரதான கருப்பொருளாக கொண்டு இலங்கை மக்களில் எண்ணிக்கையில் பெரும்பான்மையோர் பெற்றுக்கொடுத்த அரசாங்கத்தின் போக்குப் பற்றி மக்கள் தற்போது திரிசங்கு நிலையினை அடைந்திருக்கின்றார்கள். புதிய அரசாங்கம் இதுவரையில் மக்களுக்கு என்ன செய்தது? என்ன செய்ய தவறியது? என்ற பல கேள்விகளை சுமந்த வண்ணமே இலங்கை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையாக சொல்லப்போனால் யார் ஆளும் கட்சி? யார் எதிர்க்கட்சி என்று சாதாரண மக்கள் குழம்பிப் போயிருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையினை மட்டும் தான் அடிக்கடி அவதானிக்க கூடியதாக இருக்கின்றதே தவிர, நல்லாட்சி அரசாங்கத்தின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் அதிக காலதாமத்தத்தினை எடுத்துக்கொள்கின்றார்கள்.

குறிப்பாக, அரசாங்கத்திற்கு மிகப் பெரும் நெருக்கடியாக அவதானிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், யுத்தக்குற்ற தீர்மானத்தினை கூட, இராஜ தந்திர ரீதியல் இலகுவாக அணுக முடிந்த நல்லாட்சி அரசாங்கத்தினால், ஏனைய நாட்டின் அபிவிருத்தி, தேசிய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் அவர்களால் வெற்றியினை ஈட்டிக்கொள்ள முடியவில்லை. ஏன் ஈட்டிக்கொள்ள தெரியவில்லை என்றுதான் கூற முடியும். தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அமைச்சரவைக்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் பாரிய முரண்பாடுகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. முரண்பாடான கருத்துக்கள் அமைச்சர்களினால் விடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரவைக்கான கூட்டு பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு பார்க்கும்போது நல்லாட்சி என்ற சொல்லுக்கே அவர்கள் பொருள் தெரியாமல் நிற்கிறார்கள். இதனால் தான் அரசாங்கத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார். மற்றுமொரு அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோருகின்றனர். குறிப்பாக தேசிய அரசாங்கத்தினை வீழ்த்த வேண்டும் என்ற போர்வையில் துடித்துக்கொண்டிருக்கும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன போன்றவர்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியடைக் கூடிய கட்டத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக பிரதமராக இருக்க கூடிய ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார முன்னெடுப்புக்களை, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பலரும் எதிர்ப்பாக இருக்கின்றார்கள். இங்கு தேசிய அரசாங்கம் என்பது, சொல் வடிவில் மட்டுமே இருக்கின்றது. செயல் வடிவில் இல்லை. 19 சீர்த்திருத்தினை பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றியடைய வைத்த ஜனாதிபதியினால், இனிவரும் பாராளுமன்ற தீர்மானங்களை பெரும்பான்மை ஆதரவை பெற முடியுமா என்றால் அது கேள்விகுறியே. காரணம் 19வது சீர்த்திருத்தமானது அதனை அடுத்து வரவிருந்த பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தற்போதைய நிலையில் தனிப்பட்டவர்களின் மனங்களின் போக்குகளில்தான் பாராளுமன்றம் செயற்படுகின்றதே தவிர, பொது விருப்பின் கீழ் செயற்பட வில்லை என்பதே நிஜம்.

அதிகளவான அமைச்சர்கள் தனக்கு என்ன கிடைத்தது என்ற அடிப்படையில்தான் செயற்படுகின்றார்களே தவிர, தமது மக்களுக்கு என்ன தேவை என செயற்படுகின்ற தன்மை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மிக குறைவாகவே இருக்கின்றது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் விசுவாசிகள் வெறுமனே அமைச்சு பதவிகளை கொடுப்பதால் மட்டும் திருப்தி அடைந்து நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில் இன்று இலங்கையில் பல வடிவங்களில் அரசாங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் சில செயற்பாடுகள். 2. பிரதமர் ரணில் தலைமையில் சில செயற்பாடுகள். 3. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் சில செயற்பாடுகள். 4. அரசாங்கத்திற்கு வெளியில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் மறைமுக தலைமையில் சில செயற்பாடுகள். 5. ராஜித மற்றும் சம்பிக்க ரண

வக்கவின் சில செயற்பாடுகள். என அரசாங்கத்தின் செயற்பாடுகள் தனித்தனியே செயற்படுவதனை இணங்காணக் கூடியதாக இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றமாகிப் போன அதிர்ச்சியின் காரணமாகவே சோபித தேரர் சுகவீனமுற்றிருப்பதாக தர்மசிறி பண்டாரநாயக்க சமீபத்தில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.. அதனை முழுமையாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், மிக சிறிதளவு தாக்கம் செலுத்தியிருக்கும் என்பது உண்மையாகும். இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் இடம்பெற்ற சில செயற்பாடுகளும், அதனை அரசாங்கம் அணுகிய விதமும் பல சந்தேகங்களை மக்களுக்கு ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவர்கள் மீது தாக்குதல். குறிப்பாக கோரிக்கையினை வேண்டி போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையாது எதிர்த்தரப்புக்கள் அரசாங்கத்தினை விமர்சிப்பதற்கான வாய்ப்பினை பலப்படுத்தியது. அதனைப்போல குமார் குணரட்னம் கடந்த அரசாங்கத்தின் போது, கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட போது தற்போதைய பிரதமர் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர், இதனை ஒரு ஜனநாயக பிரச்சினையாக குறிப்பிட்டு, ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்தனர். ஆனால், தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றது. ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வரலாம் என அழைப்பு விடுத்த அரசாங்கம், குமார் குணரட்னத்தை நாடு கடத்த முயற்சிக்கின்றமையும் அதிகரித்த கேள்வியினை எழுப்பியுள்ளது.

மேலும், முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவுடன் ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, சிறுபான்மை மக்கள் எதிர்பார்த்த எவ்வித அபிலாசைகளும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக மலைய மக்களின் தனி வீடு கோரிக்கை தீர்க்கப்படவில்லை. கடந்த காலங்களில் பல்கலைகழக மாணவர்களால் மேற்க்கொள்ளப்பட்ட வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரதான கோரிக்கையான அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் இதுவரையில் ஒரு பூரணத்துவமான பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக எமது விடுதலை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம். எம் மாணவர்களின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும் என அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் இழுபரி செயற்பாடுகளை கேள்வி கேட்டதாக அமைந்தது.

இப்படியொரு உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்த , இலங்கையின் 14 சிறைகளில் உள்ள97 தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் என்ன செய்ய முடிந்தது? நல்லாட்சி அரசாங்கம் எல்லாவற்றிற்கும் எடுத்துக்கொள்ளும், காலத்தாமதமானது, மக்களின் தேவைப்பாடுகளை மன அழுத்தத்திற்கு உட்ப்படுத்துகின்றது. ஆகவே அரசாங்கத்தின் காலம் தவறிய சேவைகளால் விரக்தியே ஏற்படுமே தவிர திருப்தி ஏற்படாது. நாடுகளுக்கான சுற்றுலாக்களை ஆரம்பித்துள்ள தலைமைகள், முதலில் நாட்டிலுள்ள உள்நாட்டு விவகாரங்களை நிவர்த்தி செய்துவிட்டு, தமது பயணங்களை ஆரம்பித்தால் நாடும் நலம்பெரும், பயணமும் பயன்பெறும். இதனை நல்லாட்சி அரசாங்கம் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாய தேவையாகும்!

SHARE