புதிய அரசியலமைப்பில் தமிழர்களை அந்நியப்படுத்த சதி

286
புதிய அரசியல் அமைப்பில் இருந்து தமிழர்களை ஏமாற்றி வெளியேற்றும் விதமாகவே  திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் அமைப்பினை தொடங்குவதற்கு முன்னரே அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது.

கடந்த ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் பதவிகளை கையில் எடுத்தனர்.

அன்றிலிருந்து முன்னைய அரசாங்கம் செய்த அத்தனை நடவடிக்கைகளுக்கும் முற்றுலும் மாறாக மைத்திரி ரணில் அரசாங்கம் செயற்பட்டது. இதில் ஒன்று தான் அரசியல் அமைப்பில் மாற்றத்தினை கொண்டுவந்து அதிகாரங்களை பகிர்தல் என்பதாகும்.

இதுவொருபுறமிருக்க, ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இடம் கொடுத்தார்.

இதன் மூலம் மலர்ந்ததே தேசிய அரசாங்கமாகும். அரசியல் சட்டத்தின் சீர்திருத்தமாயினும் சரி, ஏனைய மாற்றங்களின் முன்னெடுப்புக்களின் போதாகினும் சரி எந்தவித எதிர்ப்பையும் இலகுவாக சமாளிப்பதற்கான திட்டங்களில் ஒன்றே இது.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் போது இலகுவாக இலங்கையின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்யப்படும்.  இதன்படியே இராசவரோதயம் சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான காரணங்களை கூறும் போது,  தற்போதைய அரசியலமைப்பில் குறையுள்ளது என்பதே. தற்போது அனைத்து அரசியல் அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே குவிந்துள்ளது.

இதனால் இலங்கையில் கொடுங்கோன்மை ஆட்சி மட்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழர் மற்றும் சிங்களர்களுக்கு இடையேயான உறவிலும் விரிசலை ஏற்படுத்திவிட்டது.

எனினும், ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த அரசியலமைப்பில் பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டு வரலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிகாரத்தை பரவலாக்கும் அவசியம் காரணமாக கடந்த 1995 -2000க்கு இடைப்பட்ட காலத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் கூட்டணிக்கு இடையே நிலவிய பூசல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனினும் கடந்தாண்டு மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை கையில் எடுத்ததுடன்   மீண்டும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான முயற்சிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே ஐனாதிபதியிடம் குவிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கும் அமைச்சர்களுக்கும் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் அச்சாரமாக இருக்க வேண்டும். சுதந்திரத்துக்கு பின் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதுக்கு இந்த அதிகார குவியலே காரணமாக இருந்தது.

ஜனாதிபதியிடம் குவிக்கப்பட்ட அதிகாரமல்ல அது. தமிழர்களுக்கு சம குடியுரிமை கிடைக்ககூடாது என்பதற்காக ஒன்றுப்பட்ட அரசியலமைப்பு வேண்டும் என்று கூறிய சிங்கள அரசியல்வாதிகளிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் அது.

குறிப்பாக இன்றைய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படக் கூடிய, செயற்படுகின்ற அரசியல்வாதிகளும், அடிப்படை இனவாதிகளும் அங்கம் வகிக்கின்றார்கள். இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வரும் பொழுது, அங்கே தமிழ் மக்களுக்கான எந்த அதிகாரங்களும் கிடைக்க விடாமல் அடிப்படை வாதிகள் எதிர்த்து வாக்களிப்பார்கள்.

இதன் மூலம் மீண்டும் இந்த நாட்டில் ஒடுக்கப்படுகின்ற, அதிகாரங்கள் அற்ற இனமாகவே தமிழினம் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

ஏனெனில் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரும் பொழுது அது ஒற்றையாட்சி அதிகாரங்களுக்கு உட்பட்டே அமையும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவொருபுறமிருக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று வரை விளங்கும் மைத்திரிபால சிறிசேனவினால் தமிழ் அரசியல் கைதிகள் விடையத்தில் சுயமாக முடிவெடுத்து, அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் பொழுது, நாடாளுமன்றத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படும் பொழுது எப்படி அடிப்படைவாதிகள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதியளிப்பார்கள் என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடக்கின்றன. அதனால் நாட்டிற்கு கேடு என்று விமர்சனம் செய்வோரும் உண்டு. அது உண்மையாயினும், அரசியல் அமைப்பு மாற்றத்திற்குப் பின்னர் இனவாதிகள் குடிகொண்டுள்ள இடத்திலேயே அதிகாரங்கள் செல்கின்றன.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கான நிறையான, ஏற்றுக்கொள்ளத்தக்க அதிகாரங்களை இந்த நாடாளுமன்றத்தில் எதிர்பார்ப்பது கடினம் என்றே தோன்றுகின்றது. மீண்டும் அவமானப்படுத்தி வெளியேற்றும் ஒரு தரப்பாக தமிழர்களை இவர்கள் மாற்றுவார்கள் என்றே தோன்றுகின்றது.

parliment-inside

SHARE