
அதுதான் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாறியமையாகும். இது இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும், மக்களின் விமோசனத்திற்கும் அடித்தனமாக அமையும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நாடு 1948ம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சோல்பரி யாப்புடன் சேர்த்து தான் இச்சுதந்திரம் வழங்கப்பட்டது. அன்று தொடக்கம் இந்நாடு சுதந்திரமடைந்து இற்றைக்கு 68 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
இக்காலப் பகுதியில் இந்நாடு மூன்று அரசியல் யாப்புக்களைக் கண்டிருக்கின்றது. அவற்றில் முதலாவது யாப்பான சோல்பரி யாப்பு பிரித்தானியரால் இந்நாட்டவரின் கருத்தறியப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவ் யாப்பு 24 வருடங்கள் இந்நாட்டின் அடிப்படைச் சட்டமாக இருந்தது.
ஆனால் 1972ம் ஆண்டில் முதலாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது பாராளுமன்றத்தை அரசியமைப்பு நிர்ணய சபையாக மாற்றியே தயாரிக்கப்பட்டது. இது அரசியலமைப்பு தொடர்பான முன்னனுபவம் இல்லாத நிலையில் தயாரிக்கப்பட்டதால் சோல்பரி யாப்பில் காணப்பட்ட இந்நாட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஏற்பாடாக விளங்கிய 29வது ஷரத்தும் நீக்கப்பட்டது.
அத்தோடு மக்களின் கருத்துக்களும் திரட்டப்படாமலேயே இந்த யாப்பு தயாரிக்கப்பட்டது. இதன் விளைவாக இவ்யாப்பு குறைபாடுகள் கொண்டதாகக் காணப்பட்டது. அதனால் அந்த யாப்பின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வந்தது.
1978ம் ஆண்டில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இரண்டாவது அரசியலமைப்பைத் தயாரித்து நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த யாப்புத்தான் சுமார் 38 வருடங்களாக நாட்டின் அரசியலமைப்பாக இருக்கின்றது.
இந்த யாப்பில் இற்றை வரையும் 19 திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் இந்த முதலாம், இரண்டாம் குடியரசு யாப்புகள் இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் ஐயங்களும் சந்தேகங்களும் ஆழமடைய வழிவகுத்தன. இது காலப்போக்கில் இனவிரிசலாக மாறி 30 வருட கால யுத்தத்திற்கும் இட்டுச் சென்றது.
என்றாலும் இந்நாடு சுதந்திரமடையும் போது இந்நாட்டை விடவும் பின்தங்கியிருந்த பல நாடுகள் இலங்கையை விடவும் பல மடங்கு எப்போதோ முன்னேற்றமடைந்து விட்டன. இருந்தும் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கிய நாடாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலைமையை இந்நாட்டின் மீது உண்மையான கரிசனை கொண்டவர்கள் நோக்கினர். அவர்கள் தான் முற்போக்கு சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்தனர்.
இத்தேர்தலின் போது நாட்டின் சுபீட்சத்தையும் நிலைபேறான அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு முற்போக்கு மாற்றங்களுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். அவ்வாக்குறுதியில் நம்பிக்கை வைத்த மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை வழங்கினர்.
அதற்கேற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இந்நாட்டில் வாழும் சகல மக்களையும் அரவணைத்தபடி நிலைபேறானதும், சுபீட்சமானதுமான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் வேலைத் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அவற்றில் பிரதான இடத்தைப் பெற்றுள்ள வேலைத்திட்டம் தான் சுமார் 38 வருடங்கள் பழைமையான அரசியலமைப்பை நாட்டுக்கும், இன்றைய யுகத்திற்கும் ஏற்றவகையில் மறுசீரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையாகும்.
அதாவது கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள், அத்தவறுகளால் நாட்டில் ஏற்பட்ட விளைவுகள், பாதிப்புக்கள் என்பவற்றை முன்னனுபவமாகக் கொண்டு அவ்வாறான தவறுகளும் குறைபாடுகளும் ஏற்பாடாத வகையில் இவ் யாப்பை உருவாக்கவே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் இவ்யாப்புக்காக மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் எற்கனவே ஆரம்பமாகி விட்டன. அதேநேரம் பாரளுமன்றம் அரசியமைப்பு நிர்ணய சபையாக நேற்றுமுன்தினம் மாற்றப்பட்டுள்ளது.
இச்சபையில் பாராளுமன்றத்தில் அங்கம் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இச்சபையின் தலைவராகச் சபாநாயகர் கரு ஜயசூரியவும், அவரது அரசியலமைப்பு நிர்ணய சபைப் பணிகளுக்கு உதவுவதற்காக சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு உப தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவும் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டது. இக்குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவுள்ளார்.
இவ்வாறான நிலையில் இச்சபை அமர்வின் தொடக்க நிகழ்வில் விஷேட உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, ‘இச்சபையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்தவர்களாக இருப்பர். இங்கு ஆற்றப்படும் அனைத்து உரைகளும் பதிவு செய்யப்படும்.
அத்தோடு இந்த அமர்வுகள் ஊடகங்களுக்காகத் திறந்து விடப்படவிருப்பதுடன் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படும்’ என்று அறிவித்தார்.
இதன்படி கடந்த காலங்களைப் போலல்லாது இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நாட்டின் சுபிட்சத்திற்கும் நிலைபேறான அபிவிருத்திக்கும் வழிவகுக்கக் கூடியதுமான அரசியமைப்பை உருவாக்குவதற்கு உண்மையான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே நாட்டின் விமோசனத்தையும் மக்களின் நல்வாழ்வையும் நிலைபேறான அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு அரசியமைப்பு நிர்ணய சபைக்கும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் இன, மத, கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.