புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதால் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது -அநுரகுமார திஸநாயக்க

295
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதனால் மாத்திரம் புரையோடி போயுள்ள  இனப்பிரச்சினைக்குத் தீர்வை கண்டுவிட முடியாது. மாறாக, நாட்டில் ஜனநாயகமும்,  நல்லிணக்கமும், சுதந்திரமும், சமத்துவமும் உறுதிப்படுத்தப்படுவதன் மூலமே இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திஸநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எங்களுடய நாட்டில் 1978ஆம் ஆண்டு கொண்டுவந்த அரசியலமைப்பு தான் பல்வேறு திருத்தங்களுடன் இன்னமும் காணப்படுகின்றது. ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட கட்சிகள் தங்களுடைய அதிகாரத்தையும், அபிலாஷைகளையும் நிலைநிறுத்திக் கொள்ளும் முகமாக பல்வேறு மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளன.

தற்போதய அரசியலமைப்பில் 19 திருத்தங்கள் காணப்படுகின்றன. அதில் 17, 19 ஆகிய  திருத்தச்சட்டங்களை தவிர்ந்த ஏனையவை அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் முகமாக கொண்டு வரப்பட்டவை. இது ஒரு திரிவுபடுத்தப்பட்ட அரசியலமைப்பாகும். நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், சமூக நலன், பொருளாதார அபிவிருத்தி ஆகிய நோக்கிலேயே அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த குழப்பகரமான அரசே அரசியலமைப்பை கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது புதிய சமூக கட்டுமானத்தை ஏற்படுத்தக்கூடிய அரசமைப்பாக இருக்கப்போவதில்லை. அவர்களின் பொருளாதாரக் கொள்கைக்கு அவசியமான அரசியலமைப்பு கொண்டுவரப்படும். மக்களின் அடிப்படை உரிமைகள், சாதாரணத்துவம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஒருபோதும் இவர்கள் கொண்டு வரப்போவதில்லை.

மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பில் உள்ள குறைபாடுதான் காரணம் எனக் காட்ட முற்படுகின்றனர். நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு போல், புதிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அவசியம். நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள யோசனை, குறிப்பிட்ட சிலவற்றை உள்ளடக்கிய குறுகிய நோக்கம் கொண்டதாகும். கட்சிகளின் கூட்டத் தொடர்களின்போது ஏனைய கட்சிகளின் யோசனை கீழ்தட்டப்படும் வகையில் பிரதமர் செயற்படுகின்றார். பிரதமர் குறிப்பிட்டசிலரின் அபிலாஷைகளை மட்டும் உள்ளடக்கப் பார்க்கின்றார்.

எனவே, நாங்கள் முடிவு செய்துள்ளதாவது நாடாளுமன்றச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும்.

அதேபோல், எங்கள் நாட்டில் சட்டம் போதாது என்று சொல்ல முடியாது. இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 19இல் 35 அமைச்சர்கள் என்று கூறி தற்போது 95ஆக உயர்த்தியுள்ளனர். இதனைத் தாண்டி தற்போது புதிதாக மாவட்ட அபிவிருத்தி அமைச்சர்கள். பொது பணம் 35 ஆயிரம் ரூபா ஊழல் செய்தாலே பாரிய தண்டனைகள் உள்ளன. எனவே, அரசமைப்பும், சட்டங்களும் செயற்படுவதில்லை என்பதே  இங்கு பிரதான குறைபாடாக உள்ளது.

அரசியலமைப்பு தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நினைக்கின்றனர். தேசிய பிரச்சினையை அரசியலமைப்பால் மாத்திரம் தீர்க்க முடியாது. ஜனநாயகம், மக்கள் ஒருமைப்பாடு, தனிமனித சுதந்திரம், சமத்தும், நல்லிணக்கம் போன்றவற்றை முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவைகள் உறுதிப்படுத்தப்படாமல் தேசிய பிரச்சினையைத்  தீர்க்க முடியாது.

புதிய அரசியலமைப்பு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆனால், ஜனநாயகத்தை நிலைநாட்ட தேவையான சட்டங்களும், நிறுவனங்களும் முறைமைப்படுத்தப்பட்ட யோசனைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

அமைச்சர்களின் செயற்பாடு, செலவு தொடர்பில் ஒரு நிலைப்பாடு வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், ஜனநாயகத்தையும், மனிதவுரிமைகளையும், சமாதானத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தொடர்பில் நாங்களும் யோசனைகளை முன்வைக்க உள்ளோம்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும், ஐரோப்பிய நாடுகளும் தங்களுடைய பொருளாதார நலனுக்கே இந்த விடயத்தைக் கையாளுகின்றன. கடந்த காலங்களில் எமது நாட்டின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் இருந்தமை காரணமாக அரசமைப்புக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது என சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையில் சந்தேகங்கள் வரும். ஆனால், அதனை இல்லை என்று அரசுதான் நிரூபிக்க வேண்டும். அதனால்தான் நாங்கள அரசமைப்பு உருவாக்கப்படும்போது ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றோம்.

எல்லோருக்கும் யோசனைகளை முன்வைக்க முடியும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அழுத்தங்கள் காணப்படக்கூடாது. எவருடைய அழுத்தத்தினாலும் அரசியலமைப்பை உருவாக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE