அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் தற்போதைய சூழலில் அதனை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல என்பது அரசாங்கம் புரி்ந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது என்று உணர்ந்து கொண்டுள்ளதால், அதனை மறைக்க அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் என்ற பெயரில் புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.
இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவது மிகவும் ஆபத்தானது. இது குறித்து எவரும் ஆராயவில்லை.
புதிய சட்டமூலத்தின் ஊடாக நியமிக்கப்படும் அமைச்சின் கீழ் பல அமைச்சுக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இதன் மூலம் அபிவிவிருத்தி வழிமுறைகள், மீன்பிடி அமைச்சர்கள் உட்பட சில அமைச்சர்கள் தமது பதவியை இழக்கக் கூடும்.
மேலும் இதன் ஊடாக புதிய நீதிமன்றம் ஆரம்பிக்கப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் இல்லாமல் போகக் கூடும். அத்துடன் ஊழல், மோசடிகளும் அதிகரிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.