
புதிய அரசியல் சாசனத்தில் உரிமைகள் பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிவில், அரசியல் உரிமைகள் மட்டுமன்றி சமூக, கலாச்சார உரிமைகளும் உள்ளடக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மக்களையும் தீர்மானம் எடுப்பதில் உள்ளீர்த்துக்கொள்ளும் வகையில் அரசியல் சாசனம் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு கூறுதல் மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய அரசாங்கமாக அமையும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றத்துடன் பாராளுமன்றம் வலுவான ஓர் கட்டமைப்பாக உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் இடம்பெற்ற வன்முறைகள் வடக்கில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதனை தடுப்பதற்கு சிறந்த ஓர் அரசியல் சாசனம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் அரசியல் சாசனத்தை அமைத்து ஆட்சி நடாத்தும் போது நல்லிணக்கத்தையும் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து மக்களும் சமவுரிமைகளுடன் வாழ்வதாக உணரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.