புதிய கடற்படைதளம் ‘வர்ஷா’வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை அனுப்பி உள்ளது என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது.
இந்திய கடற்படைக்காக வர்ஷா திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ். வர்ஷா என்ற விசாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் புதிய கடற்படை தளத்தை இந்தியா அமைக்கிறது. இந்த புதியதளம் இந்தியாவின் அணு நீர்மூழ்கி கப்பல்கள், கப்பல்களின் புதிய தலைமை தளமாக உள்ளது. இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவை கண்காணிக்கவும், அதனது அச்சுறுத்தலை முறியடிக்கவும் இந்தியா விசாகப்பட்டிணம் அருகே உயர்திறன் கொண்ட நீர்மூழ்கி கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் தலையீட்டை குறைப்பதற்கே விசாகப்பட்டினத்தில் புதியதளம் அமைக்கப்படுகிறது.
புதிய கடற்படைதளம் ‘வர்ஷா’வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை அனுப்பி உள்ளது என்று மார்ச் 6-ம் தேதி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவு தெரித்து உள்ளது. வர்ஷா திட்டம் குறித்தான தேவையான தகவல்களை பெறுவதற்கு பாகிஸ்தான் இரண்டு உளவாளிகளை அனுப்பி உள்ளது. இந்திய கடற்படை மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் நட்பாக பழகி, ஆசைகாட்டி கொழும்பு அழைத்து சென்று பெண்கள் மற்றும் பணத்தை ஏற்பாடு செய்து அவர்களிடம் இருந்து பாதுகாப்பு தகவல்களை பெற்றுவிடுங்கள் என்று உளவாளிகளிடம் பாகிஸ்தான் உளவுத்துறை கேட்டுக் கொண்டது என்று தேசிய புலனாய்வு பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எக்னாமிஸ் டைம்ஸ் தகவலின்படி, இந்தியாவின் ராணுவ பலத்தை வைத்து ‘பவர் ஆப் இந்தியா’ என்ற ஆவணப்படம் ஒன்றை எடுக்க உள்ளோம் என ஒரு படம் எடுப்பவர் போன்று தன்னை காட்டிக் கொண்டு சில ராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளிடம் நட்பு செய்ய, பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரியை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், வினித் என்ற ரானா (இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி) ஆகியோர் உளவு வேலைக்கு தலைமை தாங்கி செயல்பட்டுள்ளனர் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“சித்திக், அவ்வபோது தமீம் அன்சாரியிடம் விசாகப்பட்டிணம் கடற்படை தளம் மற்றும் வர்ஷா திட்டம் குறித்து பேசியுள்ளார். விசாகப்பட்டிணம் அருகே செல்லவும், அங்கு தங்கவும் தமீம் அன்சாரியை சித்திக் கேட்டுக் கொண்டு உள்ளார். வினித்தும் இதுதொடர்பான தகவல்களை கேட்டு உள்ளார். என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடற்படை அதிகாரிகள் அடிக்கடி செல்லும் ஓட்டல்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அன்சாரிக்கு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். மிகப்பெரிய தொழில் அதிபர் போன்று நடித்து அவர்களுடன் நட்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர். உன்னுடைய திட்டம் வெற்றியாகிவிட்டால் அவர்களை கொழும்பு அழைத்து வந்துவிடு, பாதுகாப்பு குறித்தான தகவல்களை பெற அவர்களுக்கு அங்கு பெண்கள், பணம், மதுபானம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துக் கொடு என்று உளவாளிடம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
ஆனால் அன்சாரி இதனை வெற்றிகரமாக முடித்தாரா என்பதை தேசிய புலனாய்வு பிரிவு குறிப்பிடவில்லை.
கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் தமீம் அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி, தனது கூட்டாளிகள் சிவபாலன், சலீம், ரபீக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். தற்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, இன்னொரு உளவாளி அருண்செல்வராசன் (வயது 29) என்பவரும், சென்னை சாலிகிராமத்தில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். இந்த பாகிஸ்தான் உளவாளிகளை, தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசியபுலனாய்வு படை போலீசாரும் இணைந்து வேட்டை நடத்தி பிடித்தனர்.
உளவாளி அருண்செல்வராசனிடம் விசாரணை நடத்தியபோது, மும்பையை அடுத்து, சென்னையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை தகவல்கள் வெளியாகியது. அருண் செல்வராஜன் இந்திய ராணுவப்படையின் முக்கிய இடங்களை போட்டோ எடுத்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிக்கு அனுப்பியது தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.