கிளிநொச்சி பரந்தனில் உதவும் உறவுகள் அமைப்பினருடைய இலவச கணனி கற்கைநெறிக்கூடம் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 5ம் திகதி உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் வெற்றிமயில்நாதன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்று உலகம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. வேகமான உலக வளர்ச்சியில் தொழில் நுட்பமும் அதனோடு சேர்ந்த துறைகளும் , உலகத்தை ஆட்டிப்படைக்கின்ற, உலகை உள்ளங்கையில் வைத்திருக்கின்ற சந்தர்ப்பங்கள்; உலகத்திலே கூட நடைபெற்றுக்கிருக்கின்றன. உலகம் தொழில்நுட்பத்துறையில் தன்னை சரியாக அடையாளப்படுத்தி செல்கிறது. ஆனால் எங்களுடைய நிலமைகளை நாங்கள் எண்ணிப்பார்க்கிறோம்.
உலகத்தின் தொழில்நுட்பத்துறைகளோடு எங்களால் பயணிக்க முடியாத நிலைமையில் நாங்கள் தற்பொழுது இருக்கிறோம். எம்மவர்களின் ஆட்சிக்காலத்தின் தொழில்நுட்ப அறிவாற்றலை கண்டு உலகமே அதிருப்தி கொண்டு வியந்து பார்த்தது. இன்று எங்கள் சிலரின் சிந்தனைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தீய வழிகளை நோக்கியும் தமிழினத்தின் கலாச்சாரப்பண்பாடுகளை சிதைக்கின்றதுமான கைங்கரியத்தை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்மவர்களின் சிந்தனை சிதறல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பலர் வெற்றிகளை கண்டு வருவதனையும் அரசியல் ஆதாயம் தேடும் சந்தர்ப்பங்களையும் நிகழ்கால நிகழ்வுகளினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
எங்கள் அயலில் இருக்கக்கூடிய தமிழக மக்கள் தொழில்நுட்ப துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்ற தகவல்களை நாங்கள் அறிகிறோம். 2009ற்கு பின்னராக எமது மக்களது சிந்தனைகள் எவ்வாறு மாறியிருக்கின்றது அவர்கள் எவ்வாறெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள். தமிழன் என்றும் நலிவுற்றவனாக தனது இன அடையாளங்கள் அனைத்தையும் இழந்தவனாக, வாழவே பலர் திட்டங்களை தீட்டி அதிலே வெற்றிபெற்று வருகின்ற நிலமைகளையும் நாங்கள் காண்கிறோம்.
அன்பிற்குரிய எமது உறவுகளே இந்த நிலை மாறவேண்டும். எங்கள் இனத்தின் வீர வரலாற்றுக்காலங்களை எண்ணியும் மரணித்துப்போன மானமறவர்களின் தியாகங்களையும் மனதிலே நிறுத்தி எங்கள் முன்னால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து சவால்களையும் முறியடித்து புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் ஊடாக புரட்சிகரமான மாற்றங்களுக்குள் நாங்கள் காலடி எடுத்து வைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் சின்னராசா மற்றும் மத குருமார்கள் கிளிநொச்சிப்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக மட்டப்பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.