புதிய பரிமாணம் பெறும் இலங்கை – சீன நட்புறவு

262

கடந்த வருடம் ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான தனது முதலாவது விஜயத்தை நாளை மேற்கொள்கின்றார்.

ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான முதலாவது விஜயத்தை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாகவே பிரதமரின் நாளைய பயணம் அமைந்திருக்கிறது.

இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் சீனாவுடன் கொண்டிருக்கும் நட்புறவை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கத் தவறுவதில்லை. அதேசமயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவானது இந்தியாவிலிருந்து மேற்குலகம் வரை ஆழமாக உணரப்படுவதும் உண்மை.

முன்னைய ஆட்சிக் காலத்தின் போது மஹிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்து வந்த சீன ஆதரவுக் கொள்கையின் விளைவாக இலங்கை மீது மேற்குலகம் தொடுத்த பாரதூரமான நெருக்குதல்களை இதற்கான பிரதிபலிப்புக்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

பிரதமர் ரணில் தனது அரசியல் வாழ்வில் ஆரம்பம் முதலே மேற்குலக சார்பு கொள்கையுடையவரென பரவலாகப் பேசப்படுவதுண்டு. கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குக் காரணமான ஜனாதிபதித் தேர்தலிலும், ஐக்கிய தேசியக் கட்சி மீது மேற்குலகின் ஆசீர்வாதம் மறைமுகமாக உணரப்பட்டதும் உண்மை.

எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணகர்த்தாக்களான மைத்திரியும் ரணிலும் இப்போது சீனாவுடன் நட்புறவுக்கு முனைகின்றனரென்றால் அவ்விவகாரமானது உலகுக்கு முக்கியத்துவம் மிகுந்ததாகவே அமையப் போகிறது.

பிரதமர் ரணிலின் மூன்று நாட்களுக்கான சீன விஜயமானது, இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் புதிய பரிமாணத்துக்கான ஆரம்பமென இராஜதந்திர வட்டாரங்கள் வர்ணித்திருக்கின்றன. ஆனாலும் பிராந்திய முக்கியத்துவம் தொடர்பாக நோக்குமிடத்து, சீனாவுடனான இராஜதந்திர நல்லுறவானது தவிர்க்க முடியாததென்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் நட்புறவு நெருக்கமடைந்ததும் பலமடைந்ததும் மஹிந்த ராஜபக்ஷவின் பத்து வருட கால ஆட்சிக் காலத்திலேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷ எப்போதுமே மேற்குலக விரோத கோட்பாடு கொண்டவர். அக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக அவர் இந்தியாவுடனான உறவையும் சற்று எட்ட வைத்துக் கொண்டார்.

இந்தியாவினதும் மேற்குலகினதும் அழுத்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு பிராந்திய வல்லாதிக்க நாடொன்றை நாடுவதற்கு மஹிந்த தலைப்பட்டார். அதே சமயம் மேற்குலகையும் இந்தியாவையும் பகிரங்கமாக எதிர்த்து நிற்பதற்கான வல்லாதிக்கத் துணையொன்றையும் அவர் நாடுவதற்கு முற்பட்டார்.

மஹிந்தவின் எண்ணங்களை சீனா நன்றாகவே புரிந்து கொண்டதும், அந்நாட்டின் காலடியில் வீழ்ந்தார் மஹிந்த.

இவ்வாறான உறவின் ஆரம்பமே உலக நாடுகள் இலங்கையை தள்ளி வைப்பதற்குக் காரணமாகிப் போனது. இந்துமா கடல் பிராந்தியத்தில் இந்தியாவை மிஞ்சிய வல்லரசாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் காரியங்களில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் விரோத நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு சவாலானதொரு சக்தியாக தன்னை வலுப்படுத்தி வருவதிலும் சீனா பிரதானமான கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் சீனாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணுவதென்பது இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துமென்பது கடந்த காலத்தில் நிறையவே உணரப்பட்டிருக்கிறது.

அதேவேளை இலங்கை மீது கடந்த ஆட்சிக் காலத்தில் சீனா வெளிப்படுத்திய நல்லெண்ணமானது அந்நாட்டின் பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இலங்கையில் ஏனைய வல்லாதிக்க சக்தியொன்று கால் பதிப்பதைத் தடுப்பதுடன், பிராந்தியத்தில் தனது பலத்தை வலுப்படுத்திக் கொள்வதில் இலங்கையை மறைமுகமான தளமாகப் பயன்படுத்தும் உள்நோக்கமும் சீனாவிடம் இருந்தது.

இலங்கைக்கு முன்னைய ஆட்சிக் காலத்தின் போது சீனா வாரி வழங்கிய பெருமளவு உதவிகள், சலுகைகள் யாவும் அந்நாட்டின் உள்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்கலாம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுடனும் மேற்குலகுடனும் மென்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது ஒருபுறமிருக்க, சீனாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்கின்ற கொள்கையைக் கொண்டிருக்கவில்லையென்பது தெரிகிறது.

பிராந்தியத்தில் ஆயுத பலமும் பொருளாதார பலமும் கொண்டுள்ள நாடொன்றுடன் விரோதமான உறவைப் பேணுவதென்பது நடைமுறையில் சாத்தியமானதுமல்ல.

கடந்த அரசாங்கமானது சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் ஒன்றிரண்டல்ல….. அதுமாத்திரமன்றி அந்நாட்டிடமிருந்து 3836 மில்லியன் டொலர் கடனை 14 தொடக்கம் 20 வருட கால ஒப்பந்தத்தின் பேரில் இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கான வட்டி 1.5 சதவீதம் முதல் 6.5 வீதம் வரையாகும். முன்னைய அரசு பெற்றுள்ள கடன்களையெல்லாம் இன்றைய அரசுதான் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறான நெருக்கடிகளின் பின்புலத்திலேயே சீனாவுடனான உறவு இலங்கைக்குத் தவிர்க்க முடியாததாகிப் போயுள்ளது. பிரதமரின் சீன விஜயத்தை உலகம் எத்தகைய உணர்வுடன் நோக்குகின்றது என்பதற்கு அப்பால், எமது நாட்டின் நலன் சார்ந்த விடயங்களும் இதற்குள் அடங்கியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

உலகின் முக்கிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான சீனாவிடமிருந்து பொருளாதாரம் சார்ந்த நலன்களைப் பெறுவதில் இலங்கை அக்கறை செலுத்துவது நன்மை பயக்கவே செய்யும்.

SHARE