போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையவும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனக் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இன்று எமது நாட்டு மக்கள் மிக ஆபத்தான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருப்பதோடு இலங்கையின் சனத்தொகையில் 45,000 பேர்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
சுமார் 2 இலட்சம் பேர் கஞ்சாவவைப் பயன்படுத்துகின்றனர். இலங்கையில் சிகரெட் பயன்படுத்துபவர்களில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 23.4 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான போதைப்பொருள்கள் தொடர்பில் தேடுதல்களை மேற்கொள்கின்ற அதிகாரிகளை கௌரவித்து அவர்களுக்கு உயர்ந்த விருதுகளை வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போதைப்பொருளிலிருந்து விலகியிருத்தல் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த எல்லா நடவடிக்கைகள் தொடர்பிலும் முதலாவது முன்மாதிரி அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கப்பெறவேண்டும்.
அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இதற்கு நேரடிப் பங்களிபை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.