மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று புதன்கிழமை காலை புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகே நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
புதுக்குடியிருப்பு கிராமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் மலரஞ்சலியும் செய்யப்பட்டது.
புதுக்குடியிருப்பில் 1990ஆம் ஆண்டு 09 மாதம் 21ஆம் திகதி இரவு கடற்கரை வழியாக புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக பெண்கள், வயோதிபர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.