(க.கிஷாந்தன்)
2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள புதுவருடத்தை தேசிய விழாவாக அட்டன் மற்றும் குளியாபிட்டிய பிரதேசங்களில் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் அடுத்த மாதம் 14ம் திகதி இவ்விழாவை நடத்துவதற்கான பொறுப்புகளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பாக முதலாம் கட்ட கலந்துரையாடல் 17.03.2016 அன்று பகல் அட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பகமுவ உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், வீதி போக்குவரத்து சபையினர், நீர் வளங்கள் சபையினர்,
சுகாதார திணைக்கள அதிகாரிகள், நகர வர்த்தகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்,
இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கொண்டாடப்பட்டு வந்த புது வருட தேசிய விழாக்கள் இம்முறை முதன்முறையாக அட்டன் மாநகரத்தை கேந்திரமாக கொண்டு நடத்த அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
மூவின மக்களும் செறிந்து வாழும் அட்டன் பிரதேசத்தில் இவ் தேசிய விழா கொண்டாடப்படும் அதேவேளை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரத்தை பேணும் வகையில் விழாவினை கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அட்டன் நகரில் கொண்டாடப்படும் இவ்விழா கொட்டகலை வூட்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆலயம் மற்றும் அட்டன் டன்பார் மைதானம் ஆகியவற்றில் இதற்கான நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் உட்பட வீதி ஓட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி, இந்திய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் மூவின கலாச்சாரத்தை பேணும் வகையில் நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக 17.03.2016 அன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.