புதைகுழி அகழ்வை பார்வையிட பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள்.

192

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.

மன்னார் மனித புதை குழி அகழ்வுப்பணியானது 115 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (11) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது  தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை 10.30 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்ததோடு,குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

இதே வேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் மனித புதை குழியை பார்வையிட சென்ற போது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு,கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE