இரு வேறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் 4 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடின்கடுவ பகுதியுள்ள தனியார் காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எழுவர் புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.
சம்பவத்தின் போது, 22,28,38,42,47,51 மற்றும் 52 வயதுகளையுடயை ஜா எல, கணேமுல்ல, கந்தானை மற்றும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த எழுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த எழுவரையும் கைதுசெய்துள்ள பூஜாபிட்டிய பொலிஸார் அவர்களை இன்று கலகொதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுகஹபட்டிய – மீகஹமட வீதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் இவ்வாறு புதையல் தோண்டிக்கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் வருகையை அறிந்துகொண்ட மேலும் சிலர் தப்பியோடியுள்ள நிலையில் சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நான்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது ஹூலந்தாவ மற்றும் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய படல்கும்புர பொலிஸார் தப்பியோடியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.