புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த முன்னாள் வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸ்ஸநாயக்காவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா, குடாகச்சகொடி பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் புதையல் தோண்டுவதற்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 9 பேரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது இந்த வழக்கினை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஆறுபேரை தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையிலும், ஒருவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியதுடன்,
பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஆகிய இருவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை, இவ்வழக்கு கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.