புத்தர் சிலைக்குப் பின்னால் உள்ள இனவாதிகளின் ‘அரசியல்’ குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்

260

 

ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கிவிடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்!

160901074216_buddha_statue_kanakarayankulam_640x360_bbc_nocredit

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமான மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சைகளையும் வார்த்தை மோதல்களையும் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இருக்கின்றது. இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு எனும் குக்கிராமத்தில் 101 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. இதற்கருகே முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. அதேபோன்று, மாணிக்கமடுவில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் தீக்கவாபி விகாரையும் அதைச் சூழ புனிதபூமியும் உள்ளது. ஒரு சிங்களக் குடும்பமேனும் நிரந்தரமாக வசிக்காத மாணிக்கமடு பிரதேசத்தில் உள்ள மாயக்கல்லி மலையில் இருத்தப்பட்டுள்ள புத்தர் சிலை, சிறுபான்மை மக்களிடையே பல்வேறு மனப் போராட்டங்களை உருவாக்கியிருக்கின்றது. புத்தர் போதித்த அமைதியும் இனசௌஜன்யமும் அவரது சிலை விவகாரத்தினாலேயே சிதைவடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்கள்
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலோ கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலோ சிறுபான்மை மக்கள் ஆறுதல் கொள்ளுமளவுக்கு எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட பிக்குகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முஸ்லிம்களும் தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவ்விடத்திற்கு மீண்டும் ஒரு குழுவினர் வந்து அங்கு மடாலயம் (சத்திரம்) அமைப்பதற்கான காணி தொடர்பாக ஆராய்ந்து சென்றுள்ளனர். சிங்கள கடும்போக்கு வாதத்தின் முன்னால், சிறுபான்மை மக்களின் உணர்வுகள் எல்லாம் தோற்றுப் போவதை மீண்டும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.

இந்த சிலை வைப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். முதலாவது, தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியிருக்கும் சிங்களப் பேரினவாதம், அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் மேலும் ஊடுருவி காலஓட்டத்தில் காணிகளை ஆக்கிரமிப்பதற்கான ஆரம்ப கருவியாக இதனை பயன்படுத்தலாம். புத்தர் சிலையை வைத்து அங்கு மடாலயத்தை கட்டி, பின்னர் தீகவாபிக்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முதற்கட்ட திட்டமாக இது இருக்கலாம். சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் முரண்பட வைத்து அதில் அரசியல் இலாபம் தேடுவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம்.
இவற்றையெல்லாம் மீறி, மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பான மேற்குறிப்பிட்ட நமது அனுமானங்கள் வெறும் கற்பனைகளாக பொய்த்தும் போகலாம். அதாவது, இது வெறுமனே ஒரு மதம் சார்ந்த அப்பாவித்தனமான செயற்பாடாக இது இருக்கலாம். பௌத்த மதத்தை வழிபடுவதற்காகவும் அந்த மதக் கொள்கையை பரபபும்; நோக்கிலும் மட்டுமே இக்காரியம் செய்யப்பட்டிருந்தால், மகிழ்ச்சியே! அவ்வாறே நடந்திருக்குமென்றால் தமிழர்களும் முஸ்லிம்களும் அச்சப்படுவதற்கு எந்த முகாந்திரங்களும் இருக்காது.

யதார்த்தத்தை புரிதல்
உண்மையில், முஸ்லிம்கள் வாழ்கின்ற பல பிரதேசங்களில் பள்ளிவாசல்களை கட்டியுள்ளார்கள். சில குடும்பங்களே வாழ்கின்ற அம்பாறை நகரிலும் ஒரு பள்ளிவாசல் சில கட்டுப்பாடுகளுடன் இயங்குகின்றது. அதுபோல, சிங்கள மக்கள் செறிவாக வாழும் மாத்தறை மாவட்டத்தில் தொண்டேஸ்வரம் எனப்படும் தமிழர்களின் வரலாற்றுக் கோவில் ஒன்றின் தடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டாலும் இன்றும் மாத்தறையில் உள்ள கோவிலில் தமிழர்கள் வழிபடுகின்றனர். அதேபோல் சிறுபான்மை மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களான பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, காரைதீவு, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் ஒலுவில் துறைமுகம் என பல இடங்களில் பௌத்த விகாரைகள் அல்லது புத்தர் சிலைகள் நிறுவப் பெற்றுள்ளன.

தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடபுலத்தில் கூட புத்தர் சிலைகளும் விகாரைகளும் சாந்தமாக இருக்கின்றன. அந்த அடிப்படையில் நோக்கினால் மாணிக்கமடு புத்தர் சிலை குறித்து குழப்பமடையத் தேவையில்லை என்று தோன்றுகின்றது.

ஆனால், தமிழர்களோ முஸ்லிம்களோ தமது மக்களில் ஒருவரேனும் நிரந்தரமாக வாழாத பிரதேசத்தில் தமது மத அனுஷ்டான மையங்களை நிறுவுவது இல்லை. புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிலங்களை அடையாளப்படுத்துவதும் அதை தோண்டுவதும் சிறுபான்மை மக்களின் பழக்கமும் இல்லை. அவ்வாறு இலங்கையின் நிலத்தை தோண்டிக் கொண்டே போனால், ஒருவேளை இலங்கையில் தற்போது உரிமை கொண்டாடும் எந்த இனங்களுக்கும் இந்நிலம் சொந்தமில்லாமல் கூட போய்விடலாம் என்பதை சிறுபான்மையினர் அறிவார்கள். அதேபோன்று சிறுபான்மையினர் தமது வழிபாட்டிடத்தை அமைத்துவிட்டு, பிறகு அங்கு அடாத்தாக நிலங்களைப் பிடித்த வரலாறு கிடையாது. ஆனால் சிங்கள மேலாதிக்கவாதிகள் அதைச் செய்திருக்கின்றார்கள். அவ்வாறான நிறைய அனுபவங்கள சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்றன.

‘மாணிக்கமடுவில் புத்தர் சிலையும் மடாலயமும் மட்டுமே நிறுவுவோம். அங்கு இடங்களை ஆக்கிரமிப்பதோ சிங்களவர்களை குடியேற்றுவதோ எமது நோக்கமல்ல’ என்று சிங்கள தரப்பினர் கூறுவது சற்று ஆறுதலளிக்கின்றது. இருப்பினும், ‘அம்பாறை மாவட்டத்தில் பல இடங்கள் பௌத்த புராதன இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது’ என பிக்கு ஒருவர் கூறியுள்ளமையும், ‘கல்முனை, பொத்துவில் உள்ளடங்கலாக (முஸ்லிம்கள் வாழும்) ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீகவாபிக்கு சொந்தமாக இருந்துள்ளது’ என்று அமைச்சர் தயாகமகே ஆக்ரோசமாக கூறுவதும், மேற்சொன்ன ஆறுதலை இல்லாது செய்துவிடுகின்றன.

‘நாங்கள் விரும்பினால் எல்லா இடத்திலும் சிலை வைப்போம், காணிகளை கையகப்படுத்துவோம்’ என்று இனவாதம் சொல்லாமல் சொல்வது போலுள்ளது.
அவர்களது நிலைப்பாடு
அந்த வகையில், மாணிக்கமடுவில் புத்தர் சிலையை அடாத்தாக நிறுவிய சம்பவத்திற்குப் பின்னணியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள அமைச்சர் ஒருவர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அமைச்சர் தயா கமகே, இந்த தொப்பியை தனக்கு அளவானதென போட்டுக் கொண்டுள்ளதாக தெரிகின்றது.

இவர் ஐ.தே.க.வுக்காக கடந்த காலங்களில் பெருமளவு செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தயாவுக்கு முழு அமைச்சைக் கொடுத்த ஐ.தே.கட்சி, அவரது மனைவிக்கு தேசியப்பட்டியல் எம்.பி.பதவியும் அரை அமைச்சும் கொடுத்து அழகு பார்க்கின்றது. இதிலிருந்து, தயா கமகே அக்கட்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தயா கமகே கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது தமிழ், முஸ்லிம் மக்களின்; வாக்குகளாகும். தேர்தல் பிரசாரக் காலத்தில் தன்னை சிறுபான்மை மக்களின் தோழனாக காட்டிக் கொண்ட இவர், காரியம் முடிந்த பிறகு தான் சார்ந்த சமூகத்திற்காக சிறுபான்மை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நிலைக்கு சென்றிருக்கின்றார்.

இவரது செயற்பாடு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நெருடலை தந்திருந்தாலும் அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியாது. தனது மதம் குறித்த அவரது நிலைப்பாடு நியாயமானது. தொகுதி வாரியான தேர்தல் முறைமை ஒன்றை எதிர்கொண்டுள்ள சூழலில் சிறுபான்மையினரின் உதவியும் ஆதரவும் நமக்குத் தேவையில்லை என்று அவர் எண்ணி இவ்வாறான ஒரு அரசியல் செய்திருக்கலாம். எது எப்படியிருப்பினும், நல்லாட்சி அரசாங்கத்திலும் சிங்கள மேலாதிக்க சிந்தனை அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதற்கு இது நல்லதொரு பதச் சோறாகும்.
இதேவேளை, மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரத்தில் முஸ்லிம் அரசியலின் செயற்பாடு வழக்கம் போல நகைப்புக்கிடமாகவும் சிலபோதுகளில் விசனமூட்டுவதாகவும் இருக்கின்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ‘பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் சிலை வைப்புக்கு சம்மதம் தெரிவித்ததாக’ மாவட்ட செயலாளர் கூறினார் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் கூறியுள்ளனர். அதன்பிறகு இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் மன்சூர் எம்.பி. தெரிவித்த கருத்துக்களும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு பின்னர், ‘நான் அவ்வாறு சம்மதம் தெரிவிக்கவில்லை’ என்று அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் சம்மதம் தெரிவித்தாரா இல்லையா என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும், இறக்காமத்தில் ஆற்றிய உரை ஒளிப்பட வடிவில் இருப்பதால் சந்தேகங்கள் எதுவுமில்லை. ‘இது பௌத்த நாடு அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம். அதை எந்த ராசா வந்தாலும் அகற்ற முடியாது’ எனற தொனியில் இறக்காம கூட்டத்தில் மன்சூர் எம்.பி. தெரிவித்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அத்துடன், அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ‘தடையை மீறி புத்தர் சிலையை வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது’ என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மன்சூர் வெளியிட்ட இக்கருத்து ஹக்கீமின் முயற்சிகளையும் கேலி செய்வதற்கு ஒப்பானதாகவே அமைந்தது.

இதனை மன்சூர் பின்னர் உணர்ந்திருக்கலாம். அதன்பிரகாரமே ‘நான் சம்மதம் தெரிவிக்கவில்லை ‘என்று கூறி, தனது அரசியல் இருப்பின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அவர் முயற்சி செய்வதாக சொல்லப்படுகின்றது.
எது எவ்வாறிருப்பினும், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இவ்விவகாரத்தில் ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும். அமைச்சர் மனோ கணேசனுடன் பிரதமரை சந்தித்து இவ்விடயத்தை எடுத்துரைத்துள்ளார். ஹக்கீம் போன்றவர்கள் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஒருகோணத்தில் பார்த்தால் இதுவும் கூட ஒருவகை அரசியல்தான் என்றாலும், இதில் பெரும்பாலும் சமூக நலனே உள்ளது என்பதால், இவ்வாறான நடவடிக்கைகள் சமூகமயப்படுத்தப்பட்ட அரசியலாக கொள்ளப்படுகின்றன.

தமிழ் அரசியல்வாதிகளின் முயற்சி
மாணிக்கமடு விவகாரம் ஒரு பெரிய பிரச்சினையாக போய்க் கொண்டிருக்க வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் இது விடயத்தில் பிடிகொடுக்காமல் செயற்படுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இது முற்றுமுழுதாக ஒரு தமிழ் பிரதேசம் என்றபடியால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ்விடயத்தில் பாரிய பொறுப்பிருக்கின்றது. இங்குள்ள, அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், ஒரு கட்சி என்ற அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக அறியக் கிடைக்கவில்லை. ‘வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாவிட்டால் கிழக்கு சிங்களமயமாகி பறிபோய்விடும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சொல்லி சில நாட்களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அவர் முன்னெச்சரிக்கை செய்ததுபோல் கிழக்கை பறித்தெடுக்கும் ஒரு வேலைத்திட்டமாகக் கூட இது இருக்கலாம் என்ற கோணத்திலும் இதை அணுக வேண்டியுள்ளது.
மாணிக்கமடு விவகாரத்தை த.தே.கூ. ஒரு சிறிய விடயமாக கருதக்கூடும். இதை விட பெரிய விடயங்கள் நடைபெறும் காலத்தில் இதற்குப் பின்னால் நேரத்தை செலவளிக்க வேண்டியதில்லை என்று எண்ணலாம். வடகிழக்கு இணைப்பின் அவசியம் குறித்து இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும் என்றும் நினைக்கக் கூடும். ஆனால் இவ்விடயத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. வடக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டால்  எவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவார்களோ அதே மாதிரி கிழக்கிலும் உயர் அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமென்றே தமிழ் மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
இதேவேளை இவற்றையெல்லாம் மிகைத்த ஒரு அரசியலை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. எனவே, தமிழ் முஸ்லிம் மக்களும் அவர்கள்தம் அரசியல்வாதிகளும் இது விடயத்தில் போதியளவு அக்கறை செலுத்த வேண்டும். நமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது பொது எதிரியின் ஆக்கிரமிப்பு பலத்தை அதிகரிப்பதாக அமையும். புத்தர் தொடர்பில் சிறுபான்மையினருக்கு மரியாதை உள்ளது. ஆனால் புத்தர் சிலைக்குப் பின்னால் உள்ள இனவாதிகளின் ‘அரசியல்’ குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும், அரசியல்மயமாகியுள்ள இனவாதத்தையும் சிலைக்குப் பின்னால் உள்ள அரசியலையும் மிக நூதனமாக கையாள வேண்டும்.
பொருத்தமற்ற விதத்தில் ஆளுக்கொரு மருந்தைக் கட்டும் முயற்சியில், காயத்தை புண்ணாக்கிவிடக் கூடாது.

– ஏ.எல்.நிப்றாஸ் –

SHARE