புனே மீண்டும் தோல்வி: ரோகித் ஷர்மா அதிரடியில் மும்பை அபார வெற்றி

310

புனே அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 29வது போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. புனே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இண்டியன்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய புனே அணியின் தொடக்க வீரரான ரஹானே 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், மற்றொரு தொடக்க வீரரான சௌரப் திவாரியுடன் நல்ல தொடக்கம் கொடுத்தார். திவாரி அரைசதம் கடந்து 57 ஓட்டங்களும், ஸ்மித் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஹேண்ட்காம்ப் 6 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் புனே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் திஸ்ஸர பெரேரா 12 ஓட்டங்களுடனும், ரஜாத் பாட்டியா 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பந்துவீச்சில் மும்பை சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டும், மெக்லின்கன், ஹர்பஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 160 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி எளிதாக 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரராக களமிறங்கிய பார்த்தீவ் படேல் 21 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 22 ஓட்டங்களும் ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 85 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

SHARE