புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதவான் இடமாற்றம்

295
ஊடகவியலாளர் பிரகித் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்து வரும் ஹோமாகம நீதவானுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் வை.ஆர்.பி. நெலும்தெனியவிற்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நீதவான் நெலும்தெனிய மொரட்டுவ நீதிமன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  முக்கிய பல வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வரும் காரணத்தினால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய மற்றும் மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் ஆகியோருக்கான இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் சாதாரண இடமாற்றத்தின் அடிப்படையில் நீதவான் நெலும்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 30ம் திகதி எக்னெலிகொட குடும்பம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதவானை மீறி பேசியமை குறித்து நீதவான் நெலும்தெனிய கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவப் புலானய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

SHARE