கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 9.5 வீதமான மாணவ, மாணவியரே மாவட்ட வெட்டுப் புள்ளி நிர்ணயத்திற்கு சமனான அல்லது அதனை விடவும் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இம்முறை பரீட்சைக்கு 343757 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர். இதில் 32646 மாணவ மாணவியரே மாவட்ட வெட்டுப்புள்ளி இலக்கு நிர்ணயங்களை விடவும் கூடுதலான புள்ளிகளைப பெற்றுக் கொண்டுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 76.67 வீதமான அதாவது 260130 பேர் இரண்டு பரீட்சை வினாத்தாள்களிலும் தலா 35 புள்ளிகளை விடவும் அதிகம் (மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல்) பெற்றுள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களாக இவ்வாறு 70 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் கருதப்படுகின்றனர்.
வெட்டுப்புள்ளிகளை விடவும் கூடுதல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணம் முன்னிலை வகிக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
மாவட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த பெறுபெறுகளைப் கொண்ட மாவட்டமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.
யாழ்ப்பாணம், இரத்தினபுரி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
வெட்டுப்புள்ளிகள் அதிகளவில் பெற்றுக்கொண்ட கல்வி வலயமாக யாழ்ப்பாக கல்வி வலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.