புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய 443 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பம்

119

மன்னாரில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் நடமாடும் சேவையின்போது, இலங்கைக்கு நாடு திரும்பியோர்களில் 242 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது (ICMS) மன்னார் நகரசபை மண்டபத்தில் 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுச் சென்றவர்களில், யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளவர்களின் கொன்சியுலர் தேவைகள் தொடர்பான விடயங்களுக்கு பரிகாரம் காண்பதே ஒருங்கிணைந்த கொன்சியுலர் நடமாடும் சேவையின் நோக்கமாகும்.

இரண்டு நாள் ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையினூடாக குடியுரிமைக்கான 242 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 59 பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் குடியுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் பற்றிய விடயங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை நாடியவர்களுக்கு தெளிவுரைகளும் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஒருங்கிணைந்த கொன்சியுலர் நடமாடும் சேவையில் ஓகஸ்ட் 12ஆம் திகதி பங்கேற்றதுடன், உதவியை நாடி வந்த மக்களுடன் கலந்துரையாடியும் உள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகத்தின் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் பிரஜாவுரிமை பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் இந்த ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையை நடத்தினர்.

முதலாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது கிளிநொச்சியில் 2018 ஜூலை 01-02 வரை இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் 201 பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் 61 பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE