புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையானது புதிய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டது.

208

 

நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை.

hqdefault

குறிப்பாக கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதிலாக மேலும் விரிசல்களை மேற்கொள்ளும் விஷமத்தனமான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாகவே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்தோடி விட்ட நிலையிலும் எம்மால் இதுவரை தேசிய நல்லிணக்கத்தை அடைய முடியாமல் உள்ளது.

இவ்வாறு யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் என்று வரும்போது யுத்த காலத்தில் சர்வதேச நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போன தமிழ் மக்களுடன் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் மிக்கதான ஒரு விடயமாக காணப்படுகிறது.

அதாவது இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவிகளை செய்வதற்கு தயார் என புலம்பெயர் மக்கள் அறிவித்துள்ள நிலையிலும் அதனை சரியான முறையில் ஒருங்கிணைத்து அவர்களின் உதவிகளை பெறுவதற்குகூட ஒருபொறிமுறை இதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.

இவ்வாறு புலம்பெயர் மக்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு அவர்களையும் இணைத்துக் கொள்வதும் யுத்தத்திற்கு பின்னரான தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒருவிடயமாக அனைவராலும் கருதப்படுகிறது.

ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடைவிதிக்கப்பட்ட வரலாறும் காணப்பட்டது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர் மக்களுடனான அணுகுமுறையில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையானது புதிய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட தயார் என்றும் புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நேரடியாக பார்வையிட வேண்டுமென்றும் நல்லாட்சி அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எனும் தலைப்பின்கீழ் விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா புலம்பெயர் மக்களுடன் ஏற்படுத்தப்பட வேண்டிய வலுவான தொடர்புகள் குறித்து முக்கியமான கருத்துக்களை வெளி யிட்டிருந்தார்.

அதாவது உள்நாட்டு மக்களை இன மத மொழி ரீதியில் ஒன்றிணைக்க முடியுமானாலும் புலம்பெயர் மக்களை குறித்த எந்தவொரு காரணிகளாலும் ஒன்றிணைக்க முடியாமலுள்ளமையே தற்போது காணப்படும் பெரும் சவாலாக உள்ளது.

புலம்பெயர் மக்களின் அபிலாஷைகள் எவற்றில் தங்கியுள்ளது என்பது அறியப்படாமலுள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் மக்களுக்கிடையிலான இடைவெளி மிக அதிகமாகிக்கொண்டே செல்கின்றது என்று பிரதி வெளி விவகார அமைச்சர் ஹர்ஷ டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நல்லிணக்க செயற்பாடுகளிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் புலம்பெயர் மற்றும் கடல்கடந்த மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமான தேவையாக உள்ளது.

அதனை காத்திரமான அரசியல் நகர்வுகளில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதிலேயே பெரும் சவால் தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் போது இரு தரப்புகளிடையேயும் ஏராளமான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அந்தவகையில் தற்போது மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள வடு மற்றும் சமூக அடையாளங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் போன்றன தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான தேவையாகவுள்ளன.

ஆனாலும் கடல் கடந்த மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள உணர்ச்சி பூர்வமான பிரதிபலிப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன இலங்கையின் உள்நாட்டு மக்களின் தேவைகளில் பிரதிபலித்துள்ளனவா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கமானது புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் மற்றும் யுத்தத்துக்கு பின்னரான நாட்டை கட்டியெழுப்புவதில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவர்களின் பங்களிப்பு தொடர்பில் ஆர்வத்துடன் இருக்கின்றமை தெளிவாகின்றது.

ஆனால், அதற்கேற்ற உரிய ஒருங்கிணைப்பு பொறிமுறையை அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இங்கு பரவலாக எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

அதாவது இலங்கையை சேர்ந்த சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் மக்களாக வாழ்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான இலங்கை தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி அந்நாடுகளில் புலம்பெயர் மக்கள் மிகவும் செல்வாக்கான மட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, புதிய அரசாங்கம் நல்லிணக்க வேலைத்திட்டங்களில் மிக முக்கியமான கண்ணோட்டத்தை செலுத்தியுள்ள நிலையில் அந்த செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமானதாக காணப்படுகிறது.

விசேடமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் மக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதை அண்மைக் காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு இடம்பெற்ற உப குழுக்கூட்டங்களில் பங்கேற்று புலம்பெயர் அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளாருடன் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் அவரை இலங்கைக்கு விஜயம் செய்து புதிய மாற்றத்தை பார்வையிடுமாறும் கோரியிருந்தார்.

அத்துடன் புலம்பெயர் அமைப்புக்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வமாக இருப்பதையும் இம்மானுவேல் அடிகளாரிடம் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவை அனைத்தும் குறிப்பிட்டு கூறக்கூடிய மற்றும் வரவேற்கத்தக்க அம்சங்களாக காணப்படுகின்றன.இந்நிலையில் ஒரு நல்லவிதமான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கமானது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதாவது கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தவிடயத்தில் விரைந்து அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களுடன் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு புலம் பெயர் அமைப்புக்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒரு ஒருங்கிணைப்பு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

எவ்வாறான வேலைத்திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பன தொடர்பில் அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உணர்வுகள் பிரதிபலிப்புக்கள் என்ன என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதனூடாகவே இலங்கை அரசாங்கத்திற்கும் புலம் பெயர் மக்களுக்குமிடையில் ஒரு நம்பிக்கையான புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளில் வெற்றியை நோக்கி முன்னேற முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

SHARE