
mahiiதனது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் தனது கட்டளைகளை ஏற்று போரினை முன்னெடுத்து வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றதாகப் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெரி டி சில்வாவினால் எழுதப்பட்ட KILLED IN ACTION என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு இன்று(29) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புலிகளுக்கு எதிரான போரின் போது எனது கட்டளைகளை ஏற்று இராணுவம் போரை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றது. எனினும் குறித்த போரின் போது யுத்தக் குற்றங்களை ஒரு போதும் இழைத்திருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போரினை திரிவுபடுத்தி சர்வதேசத்தின் உதவியுடன் படையினரை போர்க் குற்றவாளிகளாக்கும் நோக்குடன் தற்போதைய மைத்திரி, ரணில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
உலகில் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த இராணுவ வீரர்களை சர்வதேசத்தின் உதவியுடன் யுத்தக் குற்றவாளிகளாக்கும் முயற்சியில் தற்போதைய மைத்திரி, ரணில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குறித்த நிகழ்விற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் தயான் ஜயதிலக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.