புலிகள் சம்பந்தமாக பேசியதால் பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்! பினாங்கு முதல்வர் ராமசாமி

292
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். அதற்காக, ஏழு முறை ஈழத்துக்குச் சென்றிருக்கிறேன். விடுதலைப்புலிகள் சம்பந்தமாகப் பேசி வந்ததாலேயே பேராசிரியர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவரான ராமசாமி, மலேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர் தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் இதழில் வெளிவரும் கழுகார் பதில்கள் பகுதியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி – விடுதலைப் புலிகளுக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்பவராக இருந்திருக்​கிறீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

பதில் – விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். அதற்காக, ஏழு முறை ஈழத்துக்குச் சென்றிருக்கிறேன்.

புலித்தேவன் உட்பட பல மூத்த தலைவர்கள் அந்த வகுப்புகளில் கலந்துகொண்டனர். ஒரு விவாதம் போல அதை நடத்தினோம்.

அப்போது, புலிகளின் தலைமைச் செயலகத்துக்கும் சென்றிருக்கிறேன். தலைவர் பிரபாகரனை சந்தித்து இருக்கிறேன்.

ஒருமுறை தலைவருடன் அவரது மகன் பாலச்சந்திரனை பார்த்தேன். ரொம்ப புத்திசாலித்தனமான சிறுவன். துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடித்திருந்த காட்சிகள் இன்னும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை.

விடுதலைப்புலிகள் சம்பந்தமாகப் பேசி வந்ததாலேயே பேராசிரியர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டேன்.

கேள்வி – நீங்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்​பட்டதற்கு என்ன காரணம்? யார் காரணம்? இப்போது தடை நீக்கப்பட்டு தமிழகம் வந்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில் –  5 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அப்போது, தி.மு.க ஆட்சி நடந்தது. பதவி அதிகாரத்தில் இருந்ததால் ஈழத்தமிழர்களை அவர்கள் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காப்பாற்றவில்லை. அது எனக்கு மிகப் பெரிய வேதனையாக இருந்தது.

எனவே, கருணாநிதியை விமர்சித்தேன். பிரதமர் மன்மோகன் சிங்கையும் விமர்சித்தேன். தமிழர்களின் பிரச்னைகளைப் பேசியதற்காக, இந்திய அரசு எனக்குத் தடை விதித்தது. அதில், கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாக என்னால் தமிழ்நாட்டுக்கு வரமுடியவில்லை.

கடந்த ஆண்டு பினாங்கில் தமிழர்களுக்கான ஒரு மாநாட்டை நடத்தினேன். அதற்கு வைகோவை அழைத்திருந்தோம்.

இந்தியாவுக்கு வர எனக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம், அப்போதுதான் வைகோவுக்குத் தெரியவந்தது. அதை அறிந்து கோபப்பட்டார்.

ராஜபக்‌சவுக்கெல்லாம் வரவேற்பு கொடுக்கிறார்கள். எங்கள் மண்ணின் மைந்தரான ராமசாமி வரக் கூடாது என்றால், அதைவிட கொடுமை இருக்க முடியாது.

தடையை உடைத்து, அடுத்த ஆண்டே உங்களை நான் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்வேன். இது சபதம்’ என்று அங்கு வைகோ பேசினார்.

அந்த சபதத்தை வைகோ இப்போது நிறைவேற்றிவிட்டார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் சாதாரணம் இல்லை. எனக்காக, பிரதமர் மோடியையே நேரில் சந்தித்தார்.

பிரதமரை சந்தித்த பிறகும், அவர் எடுத்த கடும் முயற்சிகளுக்குப் பிறகே என் மீதான தடை நீக்கப்பட்டது.

வைகோ போன்றவர்கள் தலைமை தாங்கவேண்டும். அதுதான், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கான விடிவுகாலத்தை உருவாக்கும். என்றார் ராமசாமி.

SHARE