லண்டன் கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஹரோ ரெய்னர்ஸ் லேனில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தை லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் சார்பு அமைப்புக்களே ஏற்பாடு செய்துள்ளன. வழமையாக விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்கள் நடத்தும் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படுவது வழமையாகும்.
இந்த கூட்டத்திலும் வழமையாக இதனை செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் எண்ணியிருந்த போதிலும் இந்த கூட்டத்தில் புலிக்கொடி ஏற்றப்படும் என்றும் அதனை தானே ஏற்ற வேண்டி இருக்கும் என்பதை அறிந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னால் புலிக்கொடி ஏற்ற முடியாது என்றும் அக்கூட்டத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டால் தன்னால் உரையாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தியவர் ஒஸ்ரேலியாவில் இருக்கும் நிமலன் கார்த்திகேயனாகும். இந்த விடயத்தை அறிந்த நிமலன் கார்த்திகேயன் புலிக்கொடி ஏற்றும் விடயத்தை தவிர்த்துக்கொள்ளுமாறும் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனை அடுத்து புலிக்கொடி ஏற்றுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஈகைச்சுடர் ஏற்றல் அகவணக்கம் செலுத்துதல் என்பனவற்றோடு இக்கூட்டம் ஆரம்பமாகும்.
இதேவேளை வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், மற்றும் புத்தவிகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பான ஆவண படங்கள் அடங்கிய நூல் பிரித்தானிய தமிழர் பேரவையால் நாளைமறுதினம் லண்டனில் வெளியிடப்பட உள்ளது. இந்நூல் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரின் போது வெளியிடப்பட்டிருந்தது.
லண்டனில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை அழைத்துள்ளது. ஆனால் இந்த வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா என உறுதிப்படுத்த முடியவில்லை. விக்னேஸ்வரன் தற்போது லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாற்றத்திற்கான குரல் என்ற விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களில் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டங்களிலேயே கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டத்திற்கு விக்னேஸ்வரன் செல்வதை இந்த அமைப்புக்கள் விரும்பமாட்டார்கள் என தெரியவருகிறது.