கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திலுள்ள குடிநீர் கிடைக்கும் பிரதேசத்தை ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளதனால் குடிநீரின்றி பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளிடமும், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரிடமும் பல தடவைகள் முறையிட்டும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று பிரதேச மக்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர்.
யுத்தம் காரணமாக தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறிய கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்கள் 2010 ஆம் ஆண்டு மீளக் குடியேற்றப்பட்டனர்.
எனினும் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் குடிநீர் கிணறுகள் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை வளாகத்தை ஸ்ரீலங்கா இராணுவத்தின் 66 ஆவது காலாற்படைப் பிரிவு கையகப்படுத்தி வைத்துள்ளது.
அதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரி வைத்தியசாலை வளாகத்தை ஸ்ரீலங்கா இராணுவம் விடுவிக்க மறுத்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலை பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பிரதேசத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடொன்று ஏற்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள கிணறுகளின் நீர் உவர்ப்படைந்துள்ளதை அடுத்து குடிநீருக்கு பயன்படுத்தக்கூடிய நன்னீர்க்கிணறுகள் இராணுவத்தினர் வசமிருக்கும் வைத்தியசாலை வளாகத்திலேயே அமைந்துள்ளன.
எனினும் அந்தக் கிணறுகளிலிருந்து தேவையான குடிநீரைப் பெற்றுக்கொள்ள இராணுவம் அனுமதி மறுத்த வருவதால் தாம் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் புதிய வைத்தியசாலையும் தூர இடங்களிலிருந்து நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீரைக் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் 1000 லீட்டர் குடிநீர் மாத்திரம் எடுத்துவரப்படுவதன் காரணமாக நோயாளர்களைப் பராமரிக்க முடியாத நிலை காணப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகினது. இதனால் நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
“1964 ஆம் ஆண்டு, பூநகரி பிரதேசத்தின் இரு முனைகளிலும் கொண்டல் மற்றும் கச்சான் காற்று வீசியதனால், பூநகரி வடக்கு பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலப்பரப்புக்களில் கடல் உப்புநீர் புகுந்து மண்ணின் அனைத்து வளங்களையும் அள்ளிச் சென்றது. இதனால் பூநகரி மண் வளம் அனைத்தையும் இழந்ததனால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களிற்கு முகம்கொடுத்துவருகின்றனர்.
இதன்காரணமாக அன்று தொடக்கம் இன்றுவரை குறித்த பிரதேச மக்கள் அன்றாடதேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாதவாறு நீருக்காக அலைந்து திரியும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
அத்துடன் நீர்வளம் நிறைந்த பூநகரி மண்ணில் குடிநீரைப் பணம்கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபையினால் நீர்த்தாங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும் நீருக்கு 50 சதம் தொடக்கம் 1ரூபா 50 சதம் வரை அறவிடப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மக்கள், ஒரு தடவை நீரைக் கொண்டுவந்து தாங்கியில் நிரப்புவதற்கு 60 ரூபா செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தாவிட்டால் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை பூநகரிக் கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகள் கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பூநகரிக் கோட்டக் கல்வி அதிகாரி சு.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார்.