பூநகரியில் புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?

337

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்தி பகுதிக்கு இன்று விஜயம் செய்த வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா, அப்பகுதியில் இடம்பெறுகின்ற காணிவிற்பனை முறைகேடுகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அத்துடன், வெட்டுக்காட்டுப்பகுதியில் உள்ள கைலாயர் தோட்ட காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதன் போது தடுத்து நிறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இப் பகுதியிலுள்ள 860 ஏக்கர் வரையான காணிகள் முறையற்ற வகையில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முறையற்ற ஆவணங்கள் அநுராதபுரம், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த மூவரால் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இக்காணிகளை வாங்கிய ஒருவர் அண்மையில் இப்பகுதியில் புதையல் பூஜைகளை மேற்கொண்டதாகவும், வரணிப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்கு புதைக்கப்பட்ட சில பெண்களின் உடலெச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அப்பகுதி வாழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இக்காணிகளை கொள்வனவு செய்துள்ள மற்றொருவரினால், அங்கு நூற்றுக்கு மேற்பட்ட கபானா எனப்படும் விடுதிகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றை வழங்க இருப்பதாகவும் மேலதிகமாக பாரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கையுடன் தொடர்பு பட்ட பொது மக்கள் சிலரும் அதிகாரிகளும் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரை விலையாக கொடுத்து பாதுகாத்த இம்மண்ணை யார் யாரோ அள்ளிச்செல்லவும் ஆளவும் எங்களில் சிலரும் துணைபோவது எம்மண்காத்து மறைந்த வீரக்குழந்தைகளுக்கும் எம்மண்ணுக்கும் செய்யும் துரோகத்தனமான செயல் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கல்வியமைச்சரோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதனும் உடன் சென்றிருந்து நிலமைகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE