பூமியில் ஓர் அரிய வகை உயிரினம்!

756

பல அறிஞர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகள், ஏலியன் மற்றும் வேற்றுக் கிரகவாசிகளைத் தேடிப் பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

அது மட்டுமின்றி புவியிலும் ஏராளமான புதிய உயிரினங்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

புதிய உயிரினம்

லண்டனில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் (Newcastle University) ஆராய்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன் புதிய உயிரினத்தைப் பூமியிலேயே கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை உயிரினம் மீன் வகையைச் சார்ந்தது என்றும் அவற்றின் நடவடிக்கை மற்றும் உருவம் வித்தியாசமாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள அடகாமா அகழியின் ( Atacama Trench) அடிமட்ட ஆழத்தில் இந்தப் புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

டீப் ஸீ லேண்டர்

டீப் ஸீ லேண்டர் (Deep Sea Lander) என்ற அதிநவீனத் தொழில்நுட்ப ஆழ் கடல் நீர்முழ்கி ரோபோவின் உதவியுடன் இந்த அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன ரோபோவில் ஒரு மனிதன் நீருக்கடியில் இயங்கும் கேமராவைக் கொண்டு செல்லலாம்.

அந்தத் தரையிறங்கி இயந்திரம், 5 மைல் தூரத்தை 4 மணி நேரத்தில் சென்றடையும்  என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆழ் கடலின் அமைப்புகளைப் பதிவு செய்யும் பொழுது, புதிய வகை உயிரினம் இருக்கும் காட்சிகளையும் அது பதிவு செய்துள்ளது. அந்தக் காட்சிகளை ஆராயும் பொழுது இது வரை பார்த்திராத நத்தை மீன் போன்ற வடிவத்தில் புதிதாய் ஒரு உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

வழுவழுப்பான உடலமைப்பு

நீளமான வழுவழுப்பான உடலமைப்பு கொண்ட இந்த மீன் மிகவும் லேசான வெளிப்படையான தோலுடன், மிருதுவான அசைவுடன் செயல்படுகிறது. இந்தப் புதிய உயிரினத்திற்கு, தற்போதைக்கு பிங்க், நீலம் மற்றும் ஊதா அடகாமா நத்தை மீன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்த ஆழத்தில் இதுவரை காணப்பட்ட மீன்களை விட இவை பெரியவை என்று தெரிவித்திருக்கின்றனர். செதில் இல்லாத அந்த மீனில் வலிமையான எலும்புகள், பற்கள் மற்றும் காதின் உட்பகுதியில் அமைந்துள்ளன. மிகுந்த அழுத்தம் மற்றும் குளிர்ச்சியான நீரில் வாழ்வதற்கு ஏதுவாக அதன் உருவமைப்பு அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மற்ற மீன்களை வேட்டையாடி இந்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 கடலின் ஆழத்தில் இருந்து அந்த மீன்களை மேலே கொண்டு வந்தால் அவை இளகி உருகி விடும் தன்மை உடையது. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மீனைப் பலவித தொழில்நுட்ப முறைகளை மேற்கொண்டு அந்த உயிரினத்தை வெளியே எடுத்து வந்து லண்டன் நேஷனல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் (London National History museum) வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE