பெங்களூருவில் பேருந்துகளை எரித்தது 22 வயது பெண்ணா..?

227

 

தமிழகத்துக்குக் காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், கே.பி.என் பேருந்துகள் உட்பட 42 பேருந்துகள் வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டன.

இந்தப் பேருந்துகளை எரிக்க உதவியதாக, 22 வயதுமிக்க இளம்பெண்ணை பெங்களூரு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கே.பி.என் பேருந்துகள் எரியூட்டப்பட்ட பிறகு, பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கிய ஆர்.ஆர். நகர் போலீஸார், டிசோசா நகரைச் சேர்ந்த ஏழு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.

விசாரணையில், ‘‘அடையாளம் தெரியாத ஒரு பெண், பேருந்துகளுக்குத் தீவைக்க எங்களுக்கு உதவினார்’’ எனக் கைதான இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்த போது, ஓர் இளம்பெண் வன்முறையாளர்களுக்கு பெட்ரோல் கான்களை சப்ளை செய்ததும், அந்தப் பெண் பேருந்துகளுக்குள் பெட்ரோல் ஊற்றுவதும் கேமராவில் பதிவாகியிருந்தது.

சி.சி.டி.வி கமரா பதிவுகளைப் பார்த்து அதிர்ந்து போன போலீஸ், தீவிர தேடுதலுக்குப் பாக்யா என்ற பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

அவர், கே.பி.என் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த டிப்போவுக்கு அருகில் இருக்கும் கிரிநகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்யும் பாக்யா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கொலை முயற்சி, பொது சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் பாக்யா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று பாக்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், தற்போது கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டதில் பாக்யாவின் பங்கு என்ன என்பது விரைவில் வெளிவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தனது தரப்புக்கு ஆதரவாக வாதாட வழங்கறிஞரை நியமிக்க முடியாத அளவுக்கு, பாக்யா பொருளாதாரச் சிக்கலில் உள்ளாராம். இந்த நிலையில் பெங்களூருவில் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்திக் கைதானவர்களுக்கு இலசவ சட்ட உதவிகளை வழங்க உள்ளதாக பெங்களூரு வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கே.பி.என் நிறுவன உரிமையாளர் கே.பி.அன்பழகன் கூறுகையில், பேருந்துகள் கொளுத்தப்பட்ட அன்று எங்கள் நிறுவன ஓட்டுநர்கள் அந்தப் பெண்ணை சம்பவ இடத்தில் பார்த்துள்ளனர்.

வன்முறைக் கும்பலுக்கு அவர் உதவியுள்ளார். அவர், எங்கிருந்து வந்தார்… அவர் யார் போன்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை.

போலீஸாரிடம், அவரை அடையாளம் காட்டினோம். மேலும், சில வன்முறைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக எங்கள் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

பேருந்துகளைக் கொளுத்தியது பெண் மட்டும்தானா?

SHARE