பெங்களூர் அணிக்கு ஏமாற்றம்: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஐதராபாத்

202

9வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் பெங்களூர் அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களான தவான் (28), அணித்தலைவர் வார்னர் (69) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் (38), பென் கட்டிங் (39) ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவரில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்கு208 ஓட்டங்கள் குவித்தது.

பெங்களூர் அணி சார்பில் அரவிந்த 2 விக்கெட்டுகளையும், ஜோர்டான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டினார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய அணித்தலைவர் விராட் கோஹ்லி (54) அரைசதம் கடந்தார். தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர்.

அந்த அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நிலையில், 20 ஓவரில் அந்த அணியில் 7 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

SHARE