பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

304

 

shapes
கௌதம சித்தார்த்தன்
கௌதம சித்தார்த்தன

கடந்த வருடத்தில் இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper macஎன்னும் பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூக பிரக்ஞை கொண்ட விமர்சகர்களாலும், பெண்ணியவாதிகளாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

சர்வதேச மாடலிங் உலகில் பெண் உடல் எவ்வாறெல்லாம் மாற்றப்படுகிறது மேலும் எப்படி கொச்சைப் படுத்தப்படுகிறது என்று விமர்சகர்கள் விரிவான வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். அதே சமயத்தில் பல பெண்ணியவாதிகள் தங்களது உடலைக் கொண்டாட வேண்டும் என்கிற கருத்துருவத்தில் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொண்டிருக்கும் போக்குதான் இந்த நிர்வாண மாடலிங் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் பெண் உடலை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் போக்குதான் இது. பெண் உடல் இந்த அளவுகளில்தான் இருக்க வேண்டும் என்று ஆண்களால் கட்டமைக்கப் படும் நுண்ணிய கருத்தியலில் வசீகரமாய் மாட்டிக் கொண்ட பொருளாய் மாறிக் கொண்டிருக்கிறது பெண் உடல்.

நுகர்வு கலாச்சாரத்தின் உச்சியில் திளைக்கும் அமெரிக்காவில் ‘பெண் உடல்’ என்பது சலிக்காத ஒன்றாக, பெரும் வணிகப் பொருளாக இருந்து வருகிறது. பல பத்திரிகைகள் அதனை விற்றே பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன.

இப்படியான மாடலிங் பெண் உடல்களை வடிவமைக்க சர்வதேச அளவில் பிரம்மாண்டமான பயிற்சிக் கூடங்கள், சர்வதேச பயிற்சியாளர்கள், மாடலிங் இயக்குனர்கள், மாடலிங் விமர்சகர்கள், உடல் நிறம் பற்றிய பயிற்சியாளர்கள், மாடலிங் நுகர்வுப் பொருட்கள் என்று மாடலிங் துறை பிரம்மாண்டமாய் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அதுவும் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளுக்கென்றே பிரத்யேகமான வடிவமைப்பாளர்களும் உண்டு என்பது கூடுதல் தகவல். சர்வதேச சந்தையில் இந்த மாடலிங் கலாசாரம் பெரும் முதலீட்டு வர்த்தகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

அப்ரோடைட் என்னும் கிரேக்க கடவுள்தான் காதல், காமம், அழகு, இன்பம், மற்றும் இனப்பெருக்கத்திற்கான கடவுள். (இவருக்கு இணையானவராக வீனஸ் தேவதையையும் குறிப்பிடுவார்கள்) இடைக்கால சிற்பிகள் அவரை ஒல்லியான வெற்று உடலுடன் வடிவமைத்தனர். அந்த உடலமைப்பு அந்தக் கால கட்டத்தில் பெண்ணின் உடலை ஆராதிப்பதாக அமைந்திருந்தது.

அதற்குப்பின் 1867 ல் வாழ்ந்த சார்லஸ் டானா ஜிப்சன் என்னும் கிராபிக் கலைஞர் பெண்களின் உடலை விதவிதமான அழகியல் நளினங்களோடு வடிவமைக்க ஆரம்பித்தார். அழகிய பெண்ணுக்கு அவர் செய்த வரையறை தான் இன்றளவிலும் அமெரிக்க மாடலிங் துறை பின்பற்றுகிறது. Gibson Girl Series என்கிற அவரது உருவாக்கங்கள் இப்பொழுதுவரை உலகம் முழுக்க செவ்வியல் தன்மையுடன் முன்வைக்கப்படுகின்றன.

மேற்குலகம் எல்லாவற்றையும் அறிவியல் பார்வையில்தான் கவனிக்கும், அங்கே அழகோ அறிவோ எதுவானாலும் ஒரு புள்ளி விவரம் சேகரிப்பார்கள். அதன் சராசரியில் ஒரு முடிவு அதன்படி ஒரு அளவை நிலைநிறுத்துவார்கள். பிறகு எல்லாமே அதன்படிதான் கணக்கிடுவார்கள். அரசு, ஊடகங்கள் எல்லாமே அதைத்தான் பேசும். அதற்குத்தான் பாராட்டு, புகழ், பணம், பட்டம், பரிசு, அதன் ஜொலிப்பு மற்றவரை இழுக்கும், இப்படித்தான் அழகை தரப்படுத்தி இருக்கிறார்கள், அளவு வைத்து இருக்கிறார்கள். மாடல்கள், அழகிகள், நடிகைகள் ஆகத்துடிக்கும் ஒவ்வொரு இளம்பெண்ணும், இந்தக் கருத்தியலை நோக்கிப் பாய்கிறார்கள்.

அது மட்டுமல்லாது ஆயத்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு உடலை வடிவமைக்கிறார்கள். பலநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆடைகள் பலவிதமான அளவுகளில் இருந்தால் எப்படி விற்பது?

ஒரு அமெரிக்க நாட்டு ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஜீரோ சைஸ் என்ற பெயரில் ஆடையை வடிவமைக்கிறது. ஜீரோ சைஸ் என்றால் 32இன்ச் மார்புகள், 22 இடை, 33-34 இடுப்பு. ஜீரோ சைஸ் என்ற வார்த்தை உலகிலேயே மிக அழகான பெண்ணின் உடல் என்பது போன்ற அடையாளக் குறியீடு. இந்த வார்த்தையைத் தொடர்ச்சியாக சர்வதேச ஊடகங்களில் உலவவிட்டு அதை அற்புதமான அழகியல் பிம்பமாக நிலை நிறுத்துகிறார்கள்.

கைக்கடக்கமான, முழுமையான, செதுக்கிய சிலை போன்ற … என்பது போன்ற பொருள் கொண்ட கருத்துருவம். அதன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சைஸுகேற்ப நம் உடலை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஜீரோ சைஸ் உடை அணிந்திருப்பதனாலேயே உலகின் மிக அழகான பெண்ணாக மாற்றம் பெறுகிறீர்கள்.

1800 களில் அரசி விக்டோரியா காலத்தில் பெண்கள் சற்று தடிமனாக இருப்பது அழகு என்று கருதப்பட்டது இடை சிறுத்து உடல் பெருத்து இருப்பது போல் காட்டுவதற்கு செயற்கைச் சாதனங்களைப் பயன்படுத்தினார்கள் 1900 களில் ஒல்லிதான் அழகு என்ற எண்ணம் பரவியது.விளையாட்டு வீராங்கனைகள், மருத்துவர்கள் உடல் எடை என்பது வெறும் கலோரி என்ற முடிவிற்கு வந்தனர். உடலைத் தரப்படுத்த முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஒரு அழகுக்கு முன்மாதிரி உயரம் 5’ 6” எனவும் வரையறை உருவானது. திரண்ட முன்னழகும் சிறுத்த கொடி இடையும் பேரழகாகக் கருதப்பட்டது.

அந்தக் கட்டத்தில் பொதுவுடமை சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் பெண்ணின் நிலை பற்றியும், முதலாளித்துவ சமூகத்தில் அவர்கள் குடும்ப அடிமைகளாய் இருப்பது பற்றியும் குரல் எழுப்பினார். பொதுவுடமை பரவும் போதே பெண்ணிய கருத்துக்களும் பரவி வளர்ந்தன. பொதுவுடமை சிந்தனையாளர் எங்கல்ஸ், ‘முதலாளித்துவ சமுதாயத்தில் பெண் தலையாய வேலைக்காரியாக நடத்தப்படுகிறாள்..’ என்றார். ‘பெண்ணுடலில் தலை முதல் கால் வரை இன்று மாற்றப்படாத பகுதியே இல்லை’ என்று பல பெண்ணியவாதிகள் கண்டனம் தெரிவித்தனர். மனித உடல் பயிற்சியாலும்,வடிவமைப்பாலும் தொடர்ந்து மாற்றப்படுவதை விமர்சித்து வந்தனர். பெண் உடல், இனம், மதம், நாடு கடந்து தொடர்ந்து வெள்ளை மனதின் சிந்தனைக்கு ஏற்ப ஒழுங்கு படுத்தபடுவதாக அவர்கள் குரல் எழுப்பினர். பெண்ணுடல் ஒரு பண்டமாக விற்கப்படுவது குறித்து இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பெண் உடலை சர்வதேச மாடலிங் இயக்குனர்கள் வடிவமைப்பதைப் பாருங்கள்:
பெண் உடல் கூறுகளில் நான்கு வகை உடலமைப்பு உள்ளதாகவும் அதை அழகாக வடிவமைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

1. Banana (வாழைப்பழம்) 2. Apple (ஆப்பிள்) 3. Pear (பேரிக்காய்) 4.Hourglass or X shape (மணற் கடிகாரம்)
இப்படியாக மேற்குலகம் வடிவமைக்கும் கருத்துகளுக்கு, ஒரு சந்தைப் பொருளாக, பெண்கள் தங்களது உடலைக் கையளிக்கும் ஒரு மனநிலையைத் தொடர்ந்து ஊடகங்கள் கட்டமைக்கின்றன.

அது மட்டுமல்லாது உடல் பற்றிய அளவுகள் இந்த சர்வ வல்லமை பொருந்திய மேற்குலகினரால் தீர்மானிக்கப் படுகின்றன.

சென்ற ஆண்டு பெண்ணின் உடல் அளவு 36-22-36 என்று கட்டமைதிருந்தால், அது அந்த .ஆண்டுக்கு மட்டும் தான் பொருந்தும். இந்த ஆண்டு 34-22-34 என்று மாற்றவேண்டியிருக்கிறது.

ஏனெனில், சென்ற தட்பவெப்பபருவம் அப்படியானது. இந்த ஆண்டின் பருவச் சூழல் வேறுபட்டது.

இவ்வாறெல்லாம் பல்வேறு வினோதமான ஆய்வுகளை விபரீதமான ரசனைகளை முன்வைத்து பெண் உடல் கட்டமைக்கப் படுகிறது.

இந்த மேற்குலக ஆதிக்க சக்திகள், ஊடககங்கள், சமூகச் செயல்பாடுகள் தீர்மானிக்கும் வகைமையை இங்குள்ள மூன்றாம் உலக நாடுகளும் அதன் கவர்ச்சிகரமான வளர்சிகளில் மனதைப் பறி கொடுத்து அதை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிற சூழல் தான் இப்போது நிலவுகிறது. இந்த மாயைகளிலிருந்து தங்களது உடலை மீட்டெடுக்கும் சிந்தனை மிக்க பெண்மணிகளின் வருகைக்காக எதிர்பார்த்து நிற்கிறது பெண் உடல்.

SHARE