பெண் செய்தியாளர் குறித்து பேஸ்புக் பக்கத்தில் மோசமாக கருத்துகளை வெளியிட்ட நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், எஸ்.வி. சேகருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழக பா.ஜ.க அலுவலகம் அமைந்திருக்கும் வைத்தியராம் வீதி முன்பாக பெரும் எண்ணிக்கையிலான செய்தியாளர்கள் ஒன்று கூடி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எஸ்.வி. சேகர் மீதும், தொடர்ந்து மிகவும் மோசமான கருத்துக்களைத் தெரிவித்துவரும் பா.ஜ.க தேசியச் செயலர் எச். ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஒரு சில செய்தியாளர்கள் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டின் முன்பாகக் கூடி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அவரது வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். இதனையடுத்து தாக்குதல் மேற்கொண்வர்களை கைது செய்த பொலிஸார், பின்னர் விடுதலை செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.