‘பெருமாள்புரம்’ என்பது பெயர் மட்டுமல்ல. அது உங்கள் முகவரி’ – வீடமைப்பு திறப்புவிழாவில் திலகர் எம்பி

144
நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் 
மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு அமைச்சு முன்னெடுத்து வரும் வீடமைப்புத்திட்டங்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் முன்னையவர்களை நினைவு படுத்துவதற்கு மட்டுமல்ல. அது உங்கள் முகவரியும் கூட. இருநூறு வருஷகாலமாக முகவரியற்று இருந்த மக்களுக்கு இதன் மூலம் இருப்பையும் இடத்தையும் உறுதிபடுத்தும் வகையில் நமது அடையாளமாக அதனை நடைமுறைக்கு கொண்டுவர அதனை நீங்கள் புழக்கத்தில் பயன்படுத்த வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின செயலாளர் நாயகமும் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

புளியாவத்தை, ஹொன்சி தோட்டத்தில் அமையப் பெற்ற ‘பெருமாள்புரம்’ வீடமைப்பு திட்டம் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று மலையகத் தோட்ட ப்பகுதிகளில் ஆங்காங்கே லயன் வீடுகளுக்கு பதிலாக தனிவீடுகளை அமைத்து தோட்டங்களை கிராம மயமாக்கும் வேலைத்திட்டத்தினை அமைச்சர் திகாம்பரம் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அதனை குறை காண்பதிலேயே தமது காலத்தை செலவழித்து வருகின்றனர். திகாம்பரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள முழு அமைச்சராகவுள்ளார். தமிழ்முற்போக்கு கூட்டணி ஆறு ஆசனங்களுடன் அரசாங்கம் எனும் பஸ்ஸில் அமர்ந்து பயணிக்கிறது. சிலர் அரசாங்கத்தின் அரையமைச்சு பெற்று வாசற்கதவில் தொங்கிக் கொண்டு புலம்பி திரிகின்றனர். நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் மக்களுடனேயே இருக்கிறோம். தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை திரட்டி இந்தியாவுக்கு அனுப்பி அங்கிருந்து தலைமுறைகளை இறக்குமதி செய்யும் அரசியலையே மலையகத்தில் முன்னெடுக்க நினைக்கின்றனர். அவ்வாறில்லாமல் இந்திய அரசின் அபிவிருத்தி திட்டங்களை மலையகத்திற்கு கொண்டுவந்த பெருமை அமைச்சர் திகாம்பரத்தையே சாரும்.அதேபோல எமது மண்ணில் பிறந்த இளைஞர்களையே நாம் தலைமைத்துவத்திற்கு கொண்டு வருகிறோம்.

எமது அரசியல், சமூக முன்னோடிகளின் பெயரில் கிராமங்களை உருவாக்கி முகவரி உடைய சுமூகமாக அடையாளப்படுத்தி வருகிறோம். அதனைப் புழக்கத்திற்கு கொண்டு வருவது அந்த மக்கள் கைகளிலேயே உள்ளது. இன்று மக்களிடம் கையளிக்கப்படும் “பெருமாள்புரம்” தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் நிதிச் செயலாளரும் கல்வியாளருமான பி. பெருமாள் பெயரில் அமையப்பெறுகிறது. நாம் மலையகத்துக்காக சேவை செய்த அனைவரையும் கௌரவிக்கவும் நமது மலையக இளைஞர்களுக்கு நாளைய தலைமைத்துவத்தை கையளிக்கவுமே எமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

SHARE