பெல்மோரல் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிவீடுகள் அமைக்கப்படும் – சோ.ஸ்ரீதரன்

164
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் தீ விபத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
  
   
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில்  தோட்டக்குடியிருப்பொன்றில் 13 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். தற்போது இவர்கள் பெல்மோரல் தமிழ் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பார்வையிடுவதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் 14 ஆம் திகதி பெல்மோரல் தோட்டத்துக்கு விஜயம் செய்தார்.
இவருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச முக்கியஸ்தர்களும் சென்றிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக உடுதுணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில், தீ விபத்தினால் தமது இருப்பிடத்தினையும், உடைமைகளையும் இழந்துள்ளவர்களுக்கு எனது கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு விரைவில் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் உரிய தரப்பினருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில் தற்காலிக கொட்டகைகளை அமைப்பதற்காக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக தகரங்களை வழங்கி வைப்பதற்கும் அமைச்சர் திகாம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பாதிக்கப்பட்டவர்களிடத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி நாம் உதவிகளை வழங்கவுள்ளோம் என்றார்.
SHARE