பேரறிவாளனின் இளமையைச் சாப்பிட்டாச்சு! இனி தண்டனை ஏதாவது அவனுக்கு இருக்கா?

188

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தன் மகன் பேரறிவாளனை எப்படியாவது பரோலில் கொண்டு வந்து விட வேண்டும் எனப் போராடி வருகிறார் அவரின் தாய் அற்புதம்மாள்.

கடந்த வாரம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அற்புதம்மாளிடம் பேரறிவாளன் நிலை குறித்தும், பேரறிவாளனின் தந்தை உடல்நிலைக் குறித்தும் பேசினோம்.

என் மகன் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. அறிவு, படித்து விட்டு வந்தால் உயர்ந்த அதிகாரியாகவோ அல்லது ஒரு அலுவலகத்தை நடத்தக்கூடியவராகவோ வருவான் என்று எண்ணினேன்.

அவனுக்கும் திருமணம் செய்து வைக்கணும். அவனுடையப் பிள்ளைகளை இந்த மடியில் தவழவிடணும் என்றெல்லாம் துடித்தேன். அவை எல்லாம் கலைந்துபோன கனவாகிவிட்டன.

தற்போது அவனுடைய நண்பர்களைப் பார்த்துப் பேசும்போது, ‘என் மகனைக் கல்லூரியில் சேர்க்கிறேன் அம்மா’ என்று சொல்வார்கள். அவர்கள் அப்படிச் சொல்லும்போது ஒருபக்கம் மகிழ்ச்சி ஏற்படும். ‘நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்தி விட்டு வருவேன். அப்போது அறிவின் நிலை மனதுக்குள் வந்துபோகும். நெஞ்சே வெடிப்பதுபோல் இருக்கும் .

நீண்ட நாள் பரோல் கொடுத்திருந்தாலாவது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைத்திருப்பேன். 19 வயதில் உள்ளே போனவன்… தற்போது 45 வயது ஆகிவிட்டது. இந்த 26 ஆண்டுகால அவனது இளமை வாழ்க்கை முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. இதைவிட அவனுக்கு வேறு என்ன தண்டனைக் கொடுக்க முடியும்?

அவனுடைய இளமை வாழ்க்கையைச் சிறைத்தண்டனை சாப்பிட்டு முடித்த பிறகு, இன்னும் அவனைத் தண்டிக்க வேறு என்ன உள்ளது? ஏன் இதைப்பற்றி இந்த நீதித்துறை நினைக்க மறுக்கிறது என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.

அவனுக்கும் ஒரு குழந்தை பிறக்கணும். அதனை எடுத்துக் கொஞ்சவேண்டும். அந்தக் குழந்தைகளுக்கும் பாட்டியின் கடமையைச் செய்யவேண்டும் என்ற ஆசையெல்லாம் உள்ளது. இப்படிச் சின்னச் சின்ன உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

சிறைக்குள் இதேபோன்று ஏராளமான ஆயுள் சிறைவாசிகள் குடும்ப உணர்வுகளை மனதில் சுமந்துகொண்டு கம்பிகளின் பின்னே கண்ணீர் வழியக் கதறிக்கொண்டிருக்கின்றனர். நடக்கவே முடியாத ஆயுள் சிறைவாசிகள் ஏராளமானோர் குடும்பத்தைப் பார்க்க வேண்டிய ஏக்கத்தில் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிறையில் இருக்க வேண்டிய நிறைய பேர் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆயுள் சிறைவாசிகளை விடுவித்து சிறைகள் காலியானால் தப்பில்லை.

எனவே, சிறைவாசிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு அரசு விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்த அற்புதம்மாளிடம், “பேரறிவாளனின் தந்தை உடல் நிலை எவ்வாறு உள்ளது?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

ஊரில் உள்ள பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர் என் கணவர். அவருடைய மகனும் ஒழுக்கத்தோடுதான் வளர்ந்தான் என்பது அவருக்கும் அப்பகுதி மக்களுக்கும் தெரியும். அப்படியான ‘மகனின் வாழ்வு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைக்கம்பிகளுக்குள்ளேயே சிக்கிக் கிடக்கிறதே’ என்ற வேதனை, பள்ளியில் என்.சி.சி பிரிவில் பணியாற்றிய அந்த வலிமையான மனிதரை நடக்க விடாமல் செய்துவிட்டது.

என் மகன் உள்பட 7 பேர் விடுதலையைப் பற்றி தமிழக அரசு அறிவித்தபோது, கொஞ்சம் உடல்நிலைத் தேறிய அவர், மறுபடியும் ‘மத்திய அரசுத் தடையாக உள்ளது’ என்ற செய்தி தெரிந்ததும் சுக்குநூறாக உடைந்து போனார். நடக்கக்கூட முடியாமல், உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆட்பட்டு படுக்கையில் கிடக்கிறார். தன் மகன் இந்தத் தெருவில் நடமாடமாட்டானா? என்ற ஏக்கத்தோடு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மகன்; மற்றொரு பக்கம் அதை எண்ணியே வேதனையில் உருகும் தந்தை’ இப்படியானச் சூழலில் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்’ என்றார் கலங்கிய கண்களோடு.

உங்கள் மகன் பரோலில் வருவது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறீர்கள்?” என்றபோது,

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை தந்திருக்கிறார்கள். விரைவில் என் மகன் வெளியே வருவான் என்று தளராத நம்பிக்கையோடுப் பேசி முடிக்கிறார் அற்புதம்மாள்

பேரறிவாளின் பரோல் விவகாரம் குறித்து விரைவில் முடிவு!

பேரறிவாளினின் பரோல் விவகாரம் பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் விடுத்த கோரிக்கையைச் சிறைத்துறை நிராகரித்தது.

இதை எதிர்த்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேல்முறையீட்டு மனு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பேரறிவாளன் பரோல் தொடர்பாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைக்க, நேற்று முன்நாள் காலை அற்புதம்மாள் முதல்வரின் வீட்டுக்குச் சென்றார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் பரோல் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்ட போது, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேரறிவாளன் விவகாரம் குறித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் பரோல் குறித்து அவர் முடிவெடுப்பார், என தெரிவித்தார்.

SHARE