இலங்கையில் நல்லாட்சி நிறுவப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதான இரு தலைவர்களின் செயற்பாடுகளிலும் முரண்பாட்டுத் தன்மை காணப்படுவதாக தெரிய வருகிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவு கண்டுள்ள இலங்கையை மீட்டெடுக்க நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் முறையற்ற நிதிக்கொள்கையால் ஏற்பட்டுள்ள பாரிய கடன், பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்க்கை செலவை குறைத்து, ஆரோக்கியமான நிலை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மாறுபட்ட கருத்துக்கள் தற்போது சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.
அதாவது நாடு சார்ந்த எந்தவொரு தீர்மானமும் எடுக்கும் முன்னர் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்து விட்டே முன்வைக்கின்றார்கள். இதுவே நல்லாட்சியின் செயற்பாடுகள். ஆனால் மேடைக் கூட்டங்களின் போதும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதும் இருவரும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
அந்த வகையில் ஒன்றுதான் தற்போது நாட்டை ஏழ்மையிலிருந்து விடுபடும் நாடாக மாற்றுவதற்கு இருவரும் முன்வைக்கும் கருத்துக்கள் வேறுபட்டு காணப்படுகின்றன.
மைத்திரிக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஸ நாட்டை பெரும் கடனில் மூழ்கச்செய்தார். பாரிய கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டு சிறந்த பொருளாதார வளம் கொண்ட நாடாக மாற்றுவதாக ஆட்சிக்கு வரும் முன்னர் மைத்திரி கூறியிருந்தார்.
இதன்படி ஜனாதிபதியாக ஆட்சிப்பீடமேறிய மைத்திரியும் பிரதமராக பதவியேற்ற ரணிலும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்தார்கள்.
புது செயற்றிட்டங்களை உருவாக்கினார்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட வற்வரியை (15%) அமுல்படுத்தினார்கள், பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள், முதலீடுகளை அதிகரித்தார்கள், இவ்வாறு பல அபிவிருத்திகளை கூறிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது கூட்டத்தின் போது இந்த நாடு 2020இல் கடனிலிருந்து மீண்டு விடும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 71ஆவது ஐ.நா கூட்டத்தொடரில் நாடு 2017இல் கடனிலிருந்து இலங்கை மீண்டு வரும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருவரினதும் கருத்துக்கள் அரசியல் பிரமுகர்களிடமும், அவதானிகள் மத்தியிலும் பரவலாக ஆராயப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த கூற்றுக்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளனர் என்பது குறித்து சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
2020இல் நாடு கடனிலிருந்து விடுபடும் என்று பிரதமர் கூறியதற்கு பந்துல குணவர்தன “ஒரு புதையல் தான் கிடைக்க வேண்டும்” என்று கேளிக்கையாக தெரிவித்தார், மேலும் பலர் பல விமர்சனங்களை வெளியிட்டார்கள்.
இப்போது ஜனாதிபதி கூறிய கருத்துக்கு என்ன சொல்லுவார்கள் என்ற தகவல்கள் வெளிவரும் போதுதான் இந்த விடயம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு பிரதான கட்சியின் கூட்டிணைவாக நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது கட்சி சார்ந்த நலன்களின் அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
எவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், கடன் சுமையிலிருந்து நாடு விடுபட்டு, மக்கள் வாழ்வியல் ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.